இலங்கை நெருக்கடி: 'கோட்டாபய ராஜபக்ஷ எங்களை ஒன்றுசேர்த்திருக்கிறார்' - போராட்டக் களத்தில் ஒலிக்கும் குரல்

'எங்களுடைய இன்னல்களை சிங்கள மக்கள் தற்போதுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அனைத்துத் தரப்பினரையும் கோட்டாபய ஒன்று சேர்த்திருக்கிறார். அவருக்கு நன்றி' என கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் 24 மணிநேர போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.

பெரும்பாலான பகுதிகளில் இளைஞர், யுவதிகளே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொழும்பில் வாழும் தமிழர்கள் சிலர் நேற்றிரவு போராட்டத்தை நடத்தியிருந்தனர். கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தை பகுதியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இன, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற விதத்தில் அனைத்து தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த முதலாம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம், நேற்றிரவு மீள வாபஸ் பெறப்பட்டுள்ளது.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் இளைஞர், யுவதிகள் நேற்றிரவு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

ராஜபக்ஸ குடும்பத்திற்கு பயணத் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கார்மேகம் தினேஷ்குமார் தெரிவிக்கின்றார்.

"GO HOME GOTA என்ற ஹெஷ் டெக் மூலம் இவங்க விரட்டி அடிச்சா, இங்க நடந்திருக்க திருட்டுக்களுக்கு, களவுகளுக்கு யார் பதில் சொல்லுறதுனு தெரியாது. எங்களுக்கு மின்சாரம் இல்ல. குழந்தைகளுக்கு படிக்க முடியாது இருக்கு. முதியோருக்கு தேவையான மருந்துகள் இல்ல. இளைய சமூதாயத்திற்கு தேவையான வேலைகள் இல்ல. இளைய சமூதாயத்திற்கு தேவையான வேலை வாய்ப்புக்களை வழங்கி இந்த நாட்டை ஒரு நிலைமைக்கு எடுத்துக்கொண்டு வர, இவங்க கொள்ளையடிச்ச பணம் கட்டாயம் வெளிய வரனும். GO HOME GOTA என்ற ஹெஷ் டெக்கிற்கு விட, ராஜபக்ஸ குடும்பத்தை முழுமையாக தடை விதிக்கனும். நேற்று பதவி விலகுறாங்க. நாளைக்கு நாட்டை விட்டு போயிருவாங்க. சர்வதேச கணக்காய்வு ஒன்றை நாங்கள் கேட்கிறோம். இவங்க கடன் எடுத்து, எப்படியான வேலை செய்தாங்கனு இன்றைக்கு வரை தெரியாது. இது வெளியில வரும் வரைக்கும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு பயண தடை இருக்கவே வேண்டும்" என கார்மேகம் தினேஷ்குமார் குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் இளைஞர்களை வாழ விடுமாறு, கோட்டாபய ராஜபக்ஸவிடம், சமூக ஆர்வலர் அபி ராஜேஸ்வரன் கோரிக்கை விடுக்கின்றார்.

''GO HOME GOTA என்பதை விட, STAY HOME GOTA. பேசாம வீட்டிலேயே இருங்க. எங்களுக்கு நீங்க அரசியலுக்கு வந்து செய்யவும், அது எல்லாம் தேவையில்ல. எங்க கிட்ட இருந்து எடுத்த காச எல்லாத்தையும் திரும்ப நாட்டிற்கு கொடுங்க. அதை விட அவருக்கு ட்ரவல் பேன்ட் (பயணத் தடை) பண்ணனும். குடும்பத்தோட அவரு நாட்டை விட்டு போயிட்டு இருக்காரு. எங்கள போல இளைஞர்கள் இப்போ வெளிநாடு போறாங்க. பிரச்சினை இருக்கதால போயிட்டு இருக்காங்க. இப்படி எல்லா இளைஞர்களும் வெளிநாடு போனால், இந்த நாட்டுல யாரு இருக்க போறது. இளைஞர்கள் கிட்ட இருந்து எடுத்தது எல்லாத்தையும் திரும்பி தாங்க. இளைஞர்கள வாழ விடுங்க" என சமூக ஆர்வலர் அபி ராஜேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்த்தமைக்கான தான் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு நன்றி தெரிவிப்பதாக கொழும்பைச் சேர்ந்த அபிலாஷ் விஜயகுமார் குறிப்பிடுகின்றார்.

''சரியான தூர நோக்கு சிந்தனை இல்லாத காரணத்தினால் தான் இலங்கை இன்று இந்த மாதிரியான நிலைமையை எதிர்கொண்டிருக்கு. அது மட்டும் இல்ல. இந்த பிரச்சினையால உண்மையில கோட்டாபயவிற்கு நன்றி சொல்லனும். ஏனா நாட்டு மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்காங்க. இவ்வளவு நாளா தமிழ் மக்கள தப்பா நினைச்சிட்டு இருந்த எல்லாரும், இப்ப எல்லாம் ஒன்று சேர்ந்திருக்காங்க. சிங்கள மக்களுக்கும் 30 வருஷத்துக்கு முன்னால இருந்து தமிழ் மக்கள்ட குரலுக்கு என்ன நடந்தது, எதனால அவங்க பிரச்சினைகள மேற்கொண்டாங்க என்பது சிங்கள மக்களுக்கு இப்ப தான் தெரிய வந்திருக்கு. அதால எல்லாரும் ஒன்று சேர்ந்திருக்காங்க. இது அப்படியே தொடரும்னு நினைக்கிறோம்" என அபிலாஷ் விஜயகுமார் தெரிவிக்கின்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: