You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தமிழ் அரசியல் கைதிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்? அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது என்ன நடவடிக்கை?
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில், சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியல் அட்;மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் வலுக்கட்டாயமாக பிரவேசித்து, கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 12ம் தேதி இடம்பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு தரப்பிடமிருந்து எழுந்த கண்டனங்களை அடுத்து, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு பதவியை, லொஹான் ரத்வத்த நேற்றைய தினம் (செப். 15) ராஜினாமா செய்தார்.
லொஹான் ரத்வத்தவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, ராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
லொஹான் ரத்வத்த கடந்த 12ம் தேதி மது போதையில் தனது நண்பர்களுடன் குழுவாக சிறைச்சாலைக்குள் பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்ற லொஹான் ரத்வத்த, அங்குள்ள தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லொஹான் ரத்வத்த, அனுமதி பெற்ற அவரது துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என தான் நம்புவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் எவரேனும் முறைப்பாடு செய்யும் பட்சத்தில், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறுகின்றார்.
வெலிகடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டே, லொஹான் ரத்வத்த பதவியை ராஜினாமா செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக முறைப்பாடு
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து, தவறிழைத்த குற்றச்சாட்டின் கீழ், சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யுமாறு இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால், குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இந்த முறைப்பாடு இன்று செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சுதேஷ் நந்திமால் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
துப்பாக்கி சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ், லொஹான் ரத்வத்தவை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, தாம் முறைப்பாட்டின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- பிராமணர் அல்லாதோர்க்கு இடஒதுக்கீடு அளித்த கம்யூனல் ஜி.ஓ. - நூறாண்டு காணும் அரசாணை
- ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு, கொலையின் ஓராண்டு - 'வீட்டுச் சிறையில்' இறந்த பெண்ணின் குடும்பம்
- டைனோசர்களை அழித்த விண்கல் தாக்குதலில் பாம்புகள் பிழைத்தது எப்படி?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்