You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா vs இந்தியா: இலங்கையின் உண்மையான நண்பன் யார்? - ஓர் அலசல்
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில், நாணயமொன்றையும் இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், ஏனைய உலக நாடுகளை விடவும் இலங்கை அரசாங்கம் ஏன் சீனாவை உண்மையான நண்பனாக ஏற்றுக்கொள்கின்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் வீ.ஜனகனிடம் பிபிசி தமிழ் வினவியது.
இலங்கையின் உண்மையான நண்பன் சீன என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதில் எந்தவித மாற்றமும் கிடையாது என அவர் கூறுகின்றார்.
அது மாத்திரமன்றி, ஆசியாவை வழிநடத்த போவது சீன எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதையும் அவர் இதன்போது நினைவுப்படுத்தினார்.
ஆசியாவை வழிநடத்த போவது சீனா என்பது, மறைக்க முடியாத உண்மை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமன்றி, ஆசியாவிலுள்ள பல நாடுகளின் கட்சிகள் இன்று சீனாவின் அனுசரணையின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
பாகிஸ்தானின் ஆளும் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கைகள் காணப்படுகின்ற நிலையில், பாகிஸ்தானின் எதிர்கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் இன்று சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, இந்தியாவின் காங்கிரஸ் கட்சியும், 2008ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
(இரு கட்சிகளின் உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக 2008இல் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.)
இவ்வாறான காரணங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, ஆசிய கண்டத்தை வழிநடத்தும் நாடாக சீனா இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என வீ.ஜனகன் தெரிவிக்கின்றார்.
சீனாவுடன் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த உறவுகளே, இன்று ஆசிய நாடுகளின் ஏனைய நாடுகளும் அதே உறவுகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், சீனா, இலங்கையின் உண்மையான நட்பு நாடு என மஹிந்த ராஜபக்ச கூறுவதில் எந்தவித தவறும் கிடையாது என கூறிய அவர், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்துவ கட்சி மாத்திரமன்றி, நட்பு கட்சி எனவும் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு நெருங்கிய உறவு பேண வேண்டிய தேவை
இந்தியாவை அண்மித்துள்ள அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளை பேண வேண்டிய தேவை இந்தியாவிற்கு காணப்படுகின்ற போதிலும், அந்த உறவை மேம்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை உள்ளதாக அரசியல் ஆய்வாளர் வீ.ஜனகன் தெரிவிக்கின்றார்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காணப்படுகின்ற பாரிய இடைவெளியே, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் இந்தியாவை அண்மிக்காது, சீனாவை நோக்கி நகர்வதற்கான பிரதான காரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவை அண்மித்துள்ள நாடுகள், இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளை பேண வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு இருக்கின்றதா என கேள்வி எழுப்பினால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை காரணமாக, இந்தியாவை அண்மித்துள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவை நம்ப தயாராக இல்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்தியாவின் மீது, இலங்கை உள்ளிட்ட நாடுகள் நம்பிக்கையை இழந்துள்ள சந்தர்ப்பத்தில், நம்பிக்கையை வழங்கக்கூடிய ஒரு நாடு முன்வருமாக இருந்தால், அந்த நாட்டிற்கு ஆதரவாக செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் மாற்றம் வருகின்றதோ இல்லையோ, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே, இந்து சமுகத்தை, சைனா சமுத்திரமாக மாறுவதிலிருந்து காப்பாற்ற முடியும் என அரசியல் ஆய்வாளர் வீ.ஜனகன் தெரிவிக்கின்றார்.
இது இந்து சமுத்திரத்தை கைப்பற்றுவதற்கான போர் எனவும், இது நீருக்கான போர் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சைனா சமுத்திரம் (சைனா ஓசன்) என்ற பெயர் விரைவில் ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
சீனா - இலங்கை என்பது ஒரு சிறிய விடயம் என கூறிய அவர், இந்து சமுத்திர பிரச்னையே பாரிய பிரச்னை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இனி எவ்வளவு வேகமாக செயற்படுகின்றதோ, அந்தளவிற்கே, இந்து சமுத்திரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.
தமக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தேவை என 2005ம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்ததை நினைவுப்படுத்திய வீ.ஜனகன், அதே மஹிந்த ராஜபக்ச இன்று சீனாவே எமது உண்மையான நண்பன் என கூறுவது சீனா அவருக்கு கொடுத்த தைரியம் எனவும் குறிப்பிடுகின்றார்.
சீனாவினால் வழங்கப்பட்ட இந்த நம்பிக்கை மற்றும் துணிச்சலை, இந்தியா இதுவரை வழங்காமையே, தற்போது காணப்படுகின்ற பாரிய இடைவெளிக்கான காரணம் என அவர் கூறுகின்றார்.
சீனாவினால் இதுவரை பொருளாதார ஆதிக்கமே செலுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சீனாவின் அரசியல் கலாசாரம் உட்புகுத்தப்படுவதாக அவர் கூறுகின்றார்.
சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்க வேண்டும் என்றால், இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக ஜனகன் குறிப்பிடுகின்றார்.
சீனா ஏன் இலங்கையின் உண்மை நண்பன்?
வர்த்தக ஒத்துழைப்புக்களிலேயே சீனா உண்மையான நட்பு நாடு என்ற விதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அன்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்ததாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பிரதமரின் உரை தொடர்பில் பிபிசி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும், இந்தியா, என்றுமே இலங்கையின் உறவு நாடு, நட்பு நாடு என்ற விதத்திலேயே செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.
எவ்வாறாயினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் வர்த்தக ரீதியில் சீனாவே இலங்கையின் நட்பு நாடு என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இலங்கைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் உறவுகளும் அத்தியாவசியமானது என அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
பிற செய்திகள்:
- கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்; கோபப்பட்ட கரூர் ஆட்சியர்
- குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன அமைச்சர்: கோபமடைந்த சகாக்கள்
- சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - பெற்றோர் அறிய வேண்டியவை
- இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?
- சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்