You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`செந்தில் பாலாஜி செய்தால் சரி, நாங்கள் செய்தால் தவறா?' - கரூர் ஆட்சியரை கோபப்பட வைத்த பா.ஜ.க அண்ணாமலை ஆதரவாளர்கள்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டதற்காக கரூர் பா.ஜ.கவினர் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் கோபப்பட்ட மாவட்ட ஆட்சியர், அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன், இந்திய அரசின் இணை அமைச்சராக தேர்வானதால் பா.ஜ.க துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பா.ஜ.கவில் இணைந்த ஓராண்டுக்குள் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட அண்ணாமலை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும், அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வரிசையில், கரூர் மாவட்ட பா.ஜ.கவினர் இன்று காலை 10.45 மணியளவில் கரூர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும் இனிப்புகளைக் கொடுத்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தநேரம் அந்த வழியாகச் சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், அருகில் இருந்த காவலர்களிடம் விசாரித்துள்ளார்.
"கொரோனா காலத்தில் உரிய அனுமதியை பெற்றுத்தான் பட்டாசு வெடிக்கிறார்களா," என விசாரித்துவிட்டு, பா.ஜ.கவினரை கைது செய்யுமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்ட பா.ஜ.கவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியே பதற்றமாக மாறியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் சம்பவ இடத்துக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். ஒரு கட்டத்தில் பா.ஜ.கவினரை கைது செய்யாமல் அறிவுறுத்தி அனுப்பியுள்ளார்.
``என்ன நடந்தது?" என கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிவசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் மாநிலத் தலைவராக தேர்வானதற்காக 100 இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளைக் கொடுத்தும் கொண்டாடினோம். அந்த வரிசையில் கரூர் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தோம். அந்தநேரம் பார்த்து கலெக்டர் அந்த வழியாக வந்தார். "நாங்கள் எதற்காக பட்டாசு வெடிக்கிறோம்?" என அவருக்குத் தெரியவில்லை.
அங்கிருந்த போலீசாரிடம், 'அவர்களைக் கைது பண்ணுங்க' எனக் கூறியுள்ளதாகத் தெரியவந்தது. இதையடுத்து எங்களிடம் வந்த போலீசார், ` உங்களை எல்லாம் அரெஸ்ட் செய்கிறோம்' என்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாங்கள் போலீசாரிடம், "கைது செய்யும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம், நாங்கள் என்ன கொலைக் குற்றவாளியா.. கரூரில் சாராயமும் கஞ்சாவும் எப்போதும் கிடைக்கிறது. இதையெல்லாம் நீங்கள் சென்று கேட்பதில்லை. எங்களைக் கைது செய்ய விரும்பினால் செய்து கொள்ளுங்கள்," எனக் கோபத்தை வெளிப்படுத்தினோம்.
இதனையடுத்து, எஸ்.பியும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். அவரிடமும், `மாவட்டம் முழுக்க நாங்கள் கொண்டாடுவோம்' எனக் கூறிவிட்டோம். இதன்பிறகு அவர்கள் எங்களை கைது செய்யவில்லை" என்கிறார்.
மேலும், ``கரூர் மாவட்டத்தில் ஆளும்கட்சியைத் தவிர வேறு யாரும் கொண்டாடக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறு செயல்படுகிறார்கள். செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றபோது கரூரில் 500 இடங்களில் பட்டாசு வெடித்தார்கள். அப்போது போலீசார் கேட்டார்களா? அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? சாதாரண பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்ததற்காக எங்களைக் கைது செய்ய வந்தார்கள். டெல்லியில் இருந்து அவர் இன்று தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்தது. அவரது பயணத் திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டதால் இரண்டு நாள்கள் கழித்துதான் வரவிருக்கிறார். அவரை வரவேற்பதற்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடியது தவறா?" எனக் கேள்வியெழுப்பினார்.
பிற செய்திகள்:
- குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன அமைச்சர்: கோபமடைந்த சகாக்கள்
- சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - பெற்றோர் அறிய வேண்டியவை
- இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?
- சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
- ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோதி இடம்பெற்றது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்