You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தமிழக பாஜக தலைவராக நியமனம் - யார் இவர்?
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் கடந்த ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவருமான அண்ணாமலையை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமித்திருக்கிறது அக்கட்சி மேலிடம்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் புதன்கிழமை மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை, தகவல் ஒலிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முருகன் வகித்து வந்த பதவிக்கு அண்ணாமலையை நியமித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி மேலிடம்.
முன்னதாக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கே. அண்ணாமலை என சிலரது பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக பேச்சுகள் அடிபட்டு வந்தன.
கர்நாடக மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான கே. அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தனது ஐ.பி.எஸ் பதவியை ராஜிநாமா செய்தார். அப்போது அவர் தெற்கு பெங்களூரு துணை ஆணையர் பதவியை வகித்து வந்தார்.
ஆனால், தனது பதவியை அவர் ராஜிநாமா செய்த தருணத்தில், எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாகவும் அவர் தெரிவிக்கவில்லை. சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, "எனது ஆடு இன்னும் எனது குரலுக்கு செவிமடுக்கிறதா என்பதை பார்க்க ஆசையோடு இருப்பதாக" கூறியிருந்தார்.
ஆனால், விரைவிலேயே அவர் ரஜினிகாந்த் துவங்கவிருக்கும் கட்சியில் சேருவார் என்றும் பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் என்றும் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில வாரங்களிலேயே அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அண்ணாமலை யார்?
அண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்விகம். கோவையிலுள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்தார்.
2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தனக்குள் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்தான் தனது ரோல் மாடல் என்றும் நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்திருந்தார் அண்ணாமலை. We the Leaders Foundation என்ற அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. அண்ணாமலை, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர். இளங்கோவிடம் சுமார் இருபத்தைந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பாஜகவின் அரசியல் வியூகம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது கடந்த ஆண்டு கட்சியில் இணைந்த கே. அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி அளிக்கப்பட்டிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
"நயினார் நாகேந்திரனுக்கும் சரி, அண்ணாமலைக்கும் சரி கட்சிக்குள் சீனியாரிட்டி கிடையாது. ஆனால், கட்சிக்குள் இருக்கும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வைத்து கட்சியை வளர்க்க முடியாது என்பது பா.ஜ.கவுக்கு புரிந்திருக்கிறது. அதனால்தான் முருகன் தாராபுரத்தில் தோற்றாலும் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தமிழ்நாட்டு பா.ஜ.கவின் மீது கர்நாடகத்தின் ஆதிக்கம் உண்டு. தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி. ரவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அதேபோல, அண்ணாமலை போட்டியிட்ட தொகுதியில் கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வந்து தங்கி பணியாற்றினர். 20 தொகுதிகளில் வேறு யாருக்கும் இந்த அளவுக்கு வெளி மாநில ஆதரவு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு கர்நாடக செல்வாக்கு இவருக்கு உண்டு.
நயினார் நாகேந்திரன் திராவிட பின்புலம் கொண்டவர். அவரால் இன்னும் வேகமாக செயல்பட்டிருக்க முடியும். இருந்தாலும் மேலே சொன்ன காரணிகள் அண்ணாமலைக்கு சாதகமாக அமைந்தன.
இந்த நியமனத்தால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. கால் ஊன்றுமா, முடியாதா என்பது வேறு விஷயம். ஆனால், தமிழ்நாடு சார்ந்து அரசியல் செய்தால்தான் இங்கே பிழைக்க முடியும் என்பதை அக்கட்சி புரிந்துகொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த நியமனம் காட்டுகிறது," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
அண்ணாமலைக்கு காத்திருக்கும் சவால்கள்
ஆனால், அண்ணாமலையின் பணி எளிதாக இருக்கப்போவதில்லை என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன்.
"பா.ஜ.கவின் இந்துத்துவா கொள்கை கோவையில் வேண்டுமானால் ஓரளவுக்கு எடுபடலாம். ஆனால், தமிழ்நாட்டில் எடுபடாது. மத்திய அரசு எடுக்கக்கூடிய தமிழ்நாட்டிற்கு விரோதமான கொள்கைகள் பா.ஜ.க. மீதான கோபத்தை தக்கவைக்கவே செய்கின்றன. ஆகவே, அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் கட்சியை வளர்க்க விரும்பினால், இதில் கவனம் செலுத்த வேண்டும். நீட், இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை போன்றவற்றால், சிறுபான்மையினர் தவிர்த்து பா.ஜ.கவுக்கு எதிரான புதிய வாக்கு வங்கியை உருவாக்கியிருக்கிறது.
ஆகவே அண்ணாமலைக்கு முன்பாக ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஒன்று, இந்துத்துவ அரசியலை கையில் எடுக்கலாம். அது கோவை பகுதியில் அவருக்கு கைகொடுக்கக்கூடும். அல்லது தமிழகத்திற்கு ஆதரவான கொள்கைகளை வகுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி, அதன் மூலம் பா.ஜ.கவை வளர்க்கலாம். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்," என்கிறார் ப்ரியன்.
காவல் பணியில் சமூக பணியை தொடங்கி, பிறகு அதில் இருந்து விலகி சமூக ஆர்வலராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அண்ணாமலை, தமது அரசியல் ஈடுபாடு குறித்தும் முன்பு பிபிசி தமிழிடம் பேசியிருந்தார்.
'அரசியலை எதிர்மறையாகப் பார்க்காதீர்கள்'
"அரசியலையும், அரசியல்வாதிகளையும் நான் எதிர்மறையாகப் பார்ப்பதில்லை. மக்களுக்கான பொதுப் பணியைச் செய்வதற்கான உயரிய வழிமுறை அரசியல் என்று கிரேக்கத் தத்துவவியலாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அந்த பேட்டியை விரிவாகப் படிக்க:
'என்னை முடக்கப் பார்க்காதீர்கள்'
சமூக ஊடகங்களில் அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ணாமலையிடம் பேசினோம்.
அவர், "சமூக ஊடகங்களுக்கு வெளியேதான் பெரும் சமூகம் இருக்கிறது. நான் அவர்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால், எனக்கு ஒரு முத்திரை குத்த பார்க்கிறார்கள். மதம் என் தனிப்பட்ட விஷயம். நான் இந்து மடங்களுக்குச் சென்றது போல, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிப்பாட்டு தளங்களுக்கும் சென்று இருக்கிறேன். அதனைப் பகிராமல் இதனை மட்டும் பகிர்வதற்கு என்ன காரணம்? எனக்கொரு முத்திரை குத்தி முடக்கப் பார்ப்பதுதானே? நான் முடங்கும் ஆள் கிடையாது," என்கிறார்.
மேலும் அவர். "நான் வலதுசாரியோ, இடதுசாரியோ கிடையாது. எது சரியோ அந்த பாதையில் செல்ல விரும்புகிறேன். இப்போது நான் வேர்களில் வேலை செய்கிறேன். அடிமட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.
"விவசாயம் செய்கிறேன். அதற்காக நான் முழு நேர விவசாயி அல்ல. இதன் ஊடாக ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறேன்," என்கிறார் அவர்.
"அரசியல் ஆகட்டும், சமூகம் ஆகட்டும் இப்போது தமிழகத்திற்கு ஒரு புதிய பார்வை தேவை. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை. ஆனால், அவர்களால் ஒரு மாற்றத்தைக் கண்டறியமுடியவில்லை. அடிமட்டத்தில் வேலை செய்யாமல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. வேர்களில் வேலை செய்ய அறிவார்ந்த இளைஞர்கள் தேவை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்,"என்றார்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே இவர் மாநில தலைவராகியிருப்பது அக்கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிற செய்திகள்:
- ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோதி இடம்பெற்றது ஏன்?
- டோக்கியோ ஒலிம்பிக்: சானியா மிர்சா இந்த முறை சாதிப்பாரா?
- அன்டார்டிகாவில் புதிய தாவரத்தின் பெயர் 'பாரதி'
- தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் கொரோனா வராதா?
- மலேசிய அரசியல்: நள்ளிரவில் விலகிய அம்னோ கட்சி; மொகிதின் அரசு கவிழ்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்