பசில் ராஜபக்ஷ இலங்கை தேசிய பட்டியல் எம்.பி. ஆகிறார்: அரசியல் தாக்கம் எப்படி இருக்கும்?

அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டுள்ள பசில் ராஜபக்ஷ (ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர்) இலங்கையின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானி ஊடாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாளை ஜூலை 8 ஆம் திகதி அவர் பதவி ஏற்கிறார். இதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அனைத்து சகோதரர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் என்ன?

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 196 பேர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஏனைய 29 நாடாளுமன்ற உறுப்புரிமையும் தேசியப்பட்டியல் என்று அழைக்கப்படும்.பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியும் நாடளாவிய ரீதியில் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் மேற்படி 29 உறுப்புரிமையும் ஒவ்வொரு கட்சிக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

அந்த வகையில் ஒரு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகினால் அதற்குப் பதிலீடாக குறித்த கட்சியின் செயலாளர் அந்தக் கட்சியின் மற்றொரு நபரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும்.

பசிலுக்குப் பதவி வந்தது எப்படி?

நேற்று செவ்வாய்க்கிழமை பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட என்பவர் பதவி விலகினார். அந்த இடத்துக்கு மஹிந்தவின் சகோதரர் பசில் பதிலீடு செய்யப்பட்டுள்ளார்.

இவர்தான் தற்போதைய ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்சியை தொடங்கி இன்று அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு இவரே காரணமானவர்.மேலும், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோரை அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களாக மாற்றியமைக்கு இவரே காரணமாக உள்ளார்.தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் இவர் நாடாளுமன்ற உறுப்பினாரால், இவற்றுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அரசியலில் தாக்கம் எப்படி இருக்கும்?நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ள பசில், நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அமைச்சுகளுக்குப் பொறுப்பேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆளும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள், பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என வெளிப்படையாகத் தெரிவித்து வந்தனர்.

இப்போது பசில் பதவிக்கு வந்துள்ள நிலையில், அந்த சிறிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பசில் ராஜபக்ஷவால் ஒதுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

பசில் வருகையை எதிர்ப்பது ஏன்?இரட்டைக் குடியுரிமை கொண்டவர் நாடாளுமன்றம் வரக் கூடாது என்பது சிறிய கட்சித் தலைவர்கள் கூறிய காரணமாகும்.சிறிய கட்சித் தலைவர்களில் அதிகமானோர் சிங்களவர்கள் என்பது மட்டுமல்ல அவர்களில் சிலர் அமைச்சுப் பதவிகளிலும் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :