திலீப் குமார்: சத்யஜித் ரேவால் பாராட்டப்பட்ட பாலிவுட் நாயகன்

    • எழுதியவர், ரெஹான் ஃபஸல்
    • பதவி, பிபிசி நிருபர்

இந்தி திரைப்படத் துறையின் முதுபெரும் கலைஞர் திலீப் குமார் தனது 98 வயதில் புதன்கிழமை காலமானார்.

நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், இந்த ஆண்டு உடல் உபாதை காரணமாக பல முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புதன்கிழமை காலை, சுமார் 7.30 மணியளவில், மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் திலீப் குமார் உயிர் பிரிந்தது.

பிரதமர் இரங்கல்

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் திரைத்துறை நாயகனாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரிடம் ஒப்பற்ற திறமை இருந்தது. அதனால்தான் பல தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களை அவர் மகிழ்வித்தார் என்று தமது பதிவில் அவர் தெரிவித்துள்ளார். அவரது மரணம் நமது பண்பாட்டு வாழ்வுக்கு ஏற்பட்ட இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்தால் பாலிவுட் திரையுலகம், துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. பல்துறைப் பிரபலங்கள் அவரை நினைவு கூர்கின்றனர்.

பாகிஸ்தான் அதிபருடன் உரையாடல்

1999ஆம் ஆண்டு கார்கில் போர் காலத்தில், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கார்கில் போர்ச் சூழலைக் கண்டித்தார். அது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் விசாரித்து விட்டு மீண்டும் அழைப்பதாகவும் நவாஸ் ஷெரிஃப் கூறினார்.

அப்போது வாஜ்பேயி, அவரிடம், தன் அருகில் அமர்ந்து இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு நபருடன் பேசுமாறு கூறினார். அந்தக் குரலைக் கேட்டவுடனே நவாஸ் ஷெரிஃப் அடையாளம் கண்டுகொண்டார். இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவரும் பலரின் இதயங்களைக் கொள்ளை கொண்டவருமான நடிகர் திலீப் குமாரின் குரல் தான் அது.

திலீப் குமார், 'இதை நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் ஏற்படும்போதெல்லாம், இந்திய முஸ்லிம்களின் நிலைமை மிகவும் சிக்கலானதாகி விடுகிறது. அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதுகூட கடினம் ஆகிவிடுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள்.' என்று கூறினார்.

மௌனத்தின் மொழி

திலீப் குமார் அறுபது ஆண்டுகளாக நடித்திருந்தாலும், அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 63 மட்டுமே. ஆனால் அவர் இந்தி சினிமாவில் நடிப்பு கலைக்கு ஒரு புதிய வரையறையை வழங்கினார்.

கல்சா கல்லூரியில் ராஜ் கபூருடன் கூடப்படித்த இவர், மிகவும் அமைதியான மாணவராக இருந்துள்ளார்.

ஒரு நாள் இந்த மனிதர் இந்தியாவின் திரைப்பட ஆர்வலர்களுக்கு மௌனத்தின் மொழியைக் கற்பிப்பார் என்று யாருக்குத் தெரியும்? ஒரே பார்வையில், பல பக்க உரையாடல்களால் கூட சொல்ல முடியாத அனைத்தையும் சொல்லிவிடக்கூடிய திறமை கொண்டவர் அவர்.

1944-ல் இவர் தனது திரைப்படத் துறைப் பயணத்தைத் தொடங்கிய போது, பார்சி மேடை நாடகங்கள் பிரபலமாக இருந்த காலம். அதில் நடிகர்கள் உரக்கப் பேசிக் கூடுதல் நடிப்பை வெளிப்படுத்துவது வழக்கமாகியிருந்தது. அந்த நேரத்தில் இவர் நிதானமான, அதிக ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பால் பலரையும் கவர்ந்தார். முக பாவனைகளாலே அதிகம் சொல்லிவிடும் நுணுக்கத்தை இவர் அறிமுகம் செய்தார் என்று பிரபல திரைப்படவியலாளர் சலீம் இவரைப் பாராட்டினார்.

முகலாய இ-அசாம் படத்தில் பிருத்விராஜ் கபூரின் வலுவான ஆர்ப்பாட்டமான கதாபாத்திரத்திற்கு முன், இவர் தனது அமைதியான, ஆனால் திடமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.

திலீப் குமார், ராஜ் கபூர் மற்றும் தேவானந்த் ஆகியோர் இந்தி திரைப்பட உலகின் மும்மூர்த்திகள் என்று அறியப்படுகிறார்கள். ஆனால் இவர் காட்டிய பன்முக பரிமாணங்களை மற்ற இருவரும் வெளிப்படுத்தினார்களா என்பது கேள்விக்குறியே.

ராஜ் கபூர் சார்லி சாப்ளினைத் தனது ஆதர்சமாகக் கொண்டது போல், தேவ் ஆனந்த், கிரிகோரி பெக்கின் பாணியில் ஒரு பண்பட்ட, நல்ல நடத்தை உடைய மனிதனின் பிம்பத்தை உருவாக்கியிருந்தார். இருவரும் அந்தக் கட்டமைப்பை விட்டு வெளியே வர இயலவில்லை.

தேவிகா ராணியால் அறிமுகம்

'கங்கா ஜம்னா'வில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்ததைப் போலவே முகலே ஆசமில் முகலாய இளவரசரின் பாத்திரத்திற்கும் திலீப் குமார் வலு சேர்த்தார்.

தேவிகா ராணியுடனான ஒரு சந்திப்பு திலீப் குமாரின் வாழ்க்கையை மாற்றியது. நாற்பதுகளில் இந்தியத் திரையுலகில் தேவிகா ராணி கொடி கட்டிப் பறந்தார். ஆனால், திரைப்படத் துறையில் அவரின் பெரிய பங்களிப்பு, பெஷாவர் பழ வியாபாரி மகனான யூசுப் கானை 'திலீப் குமார்' ஆக்கியதே ஆகும்.

பாம்பே டாக்கீசில் ஒரு திரைப்படப் படப்பிடிப்பைப் பார்க்கப்போயிருந்த அழகான இளைஞனான யூசுப்கானிடம் உருது தெரியுமா என்று தேவிகா ராணி கேட்க, தெரியும் என்று இவர் சொல்ல, நடிக்க விருப்பமா என்ற அவரது அடுத்த கேள்வி, யூசுப் கானை திலீப் குமார் ஆக்கியது வரலாறு.

திலீப்குமார் ஆன கதை

ஒரு காதல் கதாநாயகனுக்கு யூசுப் கான் என்ற பெயர் பொருத்தமானதாக இருக்காது என்று தேவிகா ராணி கருதினார். பம்பாய் டாக்கீசில் பணிபுரிந்த பின்னர் ஒரு பெரிய இந்தி கவிஞரான நரேந்திர சர்மா அவருக்கு மூன்று பெயர்களைப் பரிந்துரைத்தார். ஜஹாங்கிர், வாசுதேவ் மற்றும் திலீப் குமார். யூசுப் கான் தனது புதிய பெயராக திலீப் குமார் என்பதைத் தேர்ந்தெடுத்தார்.

இதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருந்தது. இவரது தந்தை சற்று பழமைவாதி. திரைப்படத்துறை குறித்த நல்ல அபிப்ராயம் இல்லாதவர். மகன் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பதைத் தந்தையிடமிருந்து மறைக்கவும் இந்தப் பெயர் மாற்றம் உதவியது. திலீப் குமார் தனது முழு திரைப் பயணத்திலும், ஒரு முறை மட்டுமே ஒரு முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்தார், அந்த படம் கே. ஆசிப்பின் முகலே ஆசம்.

சிதார் வாசிக்கப் பயிற்சி

ஆறு தசாப்தங்களாக நீடித்த அவரது திரைப்பட வாழ்க்கையில், திலீப் குமார் மொத்தம் 63 படங்களில் நடித்து ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

'கோஹினூர்' படத்தில் ஒரு பாடலில் சிதார் வாசிக்கும் ஒரு காட்சிக்காக, உஸ்தாத் அப்துல் ஹலீம் ஜாபர் கானிடமிருந்து பல ஆண்டுகள் சித்தார் வாசிக்கப் பயிற்சி பெற்றார். பிபிசியுடன் பேசிய திலீப் குமார், 'சிதாரை எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்காக மட்டுமே நான் பல ஆண்டுகளாக சித்தர் பயிற்சி எடுத்தேன். சித்தாரின் தந்திகளில் என் விரல்கள் வெட்டுப்பட்டும் இருக்கின்றன' என்று கூறியிருந்தார். இது போலவே நயாதௌர் படத்திலும் சிறப்பு பயிற்சி பெற்றார். இதனால் தான் சத்யஜித் ரே இவரை 'மெதட் கதாநாயகன்' என்று பாராட்டினார்.

சோக கதாநாயகன்

திலீப் குமார் பல நடிகைகளுடன் காதல் காட்சிகளில் நடித்திருந்தார். அவர் பல நடிகைகளுடன் நெருங்கிய உறவையும் கொண்டிருந்தார், ஆனால் அவரால் அந்த உறவுகளைத் திருமணம் என்ற நிலைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

அவர் இதயத்தின் வேதனை அவருக்கு 'சோக கதாநாயகன்' என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது. பல படங்களில் அவர் இறப்பது போலக் காட்சி வரும். அவரது ஒவ்வொரு படத்திலும் அவர் இறந்து போவது போலவே காட்சி அமைந்த ஒரு காலம் இருந்தது. அதுவும் தத்ருபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அதிகம் மெனக்கெடுவது வழக்கம்.

திலீப் குமார் பிபிசியிடம் கூறியதாவது, 'ஒரு காலத்தில் இறக்கும் காட்சியைச் செய்யும்போது நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன், அதைக் கடக்க மருத்துவர்களிடமிருந்து சிகிச்சை பெற வேண்டியிருந்தது. சோகமான படங்களை விட்டுவிட்டு நகைச்சுவைக்கு முயற்சி செய்யுங்கள் என்று அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார். லண்டனில் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்த பிறகு, 'கோஹினூர்', 'ஆசாத்' மற்றும் 'ராம் அவுர் ஷியாம்' போன்ற படங்களில் நகைச்சுவை அதிகம் இருந்தது.'

மதுபாலாவுடன் காதலும் முறிவும்

அதிக படங்கள் நர்கிஸுடன் நடித்திருந்தாலும், சிறந்த ஜோடியாகக் கருதப்பட்டது மதுபாலாவும் திலிப் குமாரும் தான். மதுபாலாவுடன் காதல் மலர்ந்த காலமும் உண்டு.

தனது சுயசரிதையான 'தி சப்ஸ்டன்ஸ் அண்ட் த ஷேடோ' இல், திலீப் குமார் ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் மதுபாலாவிடம் தான் ஈர்க்கப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்.

'மதுபாலா மிகவும் கலகலப்பான மற்றும் சுறுசுறுப்பான பெண்மணி, என்னைப் போன்ற ஒரு கூச்ச சுபாவமுள்ள நபருடன் கூட சரளமாகப் பழகக் கூடியவர். என்று திலீப் கூறுகிறார்.

ஆனால் மதுபாலாவின் தந்தை எதிர்த்ததால், இந்தக் காதல் கதை நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை. மதுபாலாவின் தங்கை மதுர் பூஷண் நினைவு கூர்ந்தார், 'அப்பா தன்னை விட திலீப் மூத்தவர் என்று நினைத்தார். அவர்கள் இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடி தான். ஆனாலும் இது சரி வராது என்று தந்தை கூறிவிட்டார்."

'ஆனால் அவள் தந்தையின் பேச்சைக் கேட்கவில்லை, திலீப்பை நேசிப்பதாகத் தான் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், 'நயா தௌர்' படம் தொடர்பாக பி.ஆர்.சோப்ராவுடன் நீதிமன்ற வழக்கு நடந்தபோது, எனது தந்தைக்கும் திலீப் சஹாபிற்கும் இடையே பிளவு ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அவர்களுக்கு இடையே ஒரு தீர்வும் எட்டப்பட்டது.'

' திருமணம் செய்து கொள்வோம்' என்று திலீப் கூறினார். இது குறித்து மதுபாலா நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் என்றும் ஆனால் முதலில் நீங்கள் என் தந்தையிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றும் கூறினார். ஆனால் திலீப் குமார் அதைச் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து, இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.'

முகலே ஆசம் உருவாவதற்கு நடுவில், இருவருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நிற்கும் அளவுக்கு நிலைமை வந்தது. முகலே ஆசமின் பிரபலமான காதல் காட்சி படமாக்கப்பட்ட போது மதுபாலா மற்றும் திலீப் குமார் ஒருவருக்கொருவர் பொதுவெளியில் முகம் பார்ப்பதைக் கூட நிறுத்திவிட்ரிருந்தனர்.

சாய்ரா பானுவுடன் திலீப் குமாரின் திருமணம் நடந்த பிறகு மதுபாலா மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரைச்ர் சந்திக்க விரும்புவதாக திலீப் குமாருக்கு ஒரு செய்தி அனுப்பினார்.

அவரைச் சந்திக்கச் சென்ற நேரத்தில், மதுபாலா மிகவும் பலவீனமாக இருந்தார். இதைக் கண்டு திலீப் குமார் வேதனையடைந்தார். சிரித்த முகமாக இருக்கும் மதுபாலா அன்று ஒரு சிறு புன்னகை செய்தார்.

மதுபாலா 23 பிப்ரவரி 1969 அன்று தனது 35ஆவது வயதில் இறந்தார்.

ஸ்டைல் நாயகன் திலீப் குமார்

அவரது நெற்றியில் 'வி' வடிவத்தில் விழும் முடி, தேசிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது.

திலீப் குமாரின் சுயசரிதை எழுதிய மேக்நாத் தேசாய் எழுதுகிறார், 'நாங்கள் அவரது தலைமுடி, உடைகள், உரையாடல் மற்றும் மெனரிஸம் ஆகியவற்றைப் பின்பற்றி, அவர் திரையில் நடித்த கதாபாத்திரங்களை ஒருங்கிணைக்க முயற்சித்தோம்.'

அவருக்கு வெள்ளை நிறம் மிகவும் விருப்பம். அவர் பெரும்பாலும் ஒரு வெள்ளை சட்டை மற்றும் சற்று தளர்வான வெள்ளை கால்சட்டையில் காணப்பட்டார். உருது கவிதை மற்றும் இலக்கியத்தில் அவருக்கு சிறப்பு ஆர்வம் இருந்தது. அவர் மிகவும் படித்த மனிதர், உருது, இந்தி, ஆங்கிலம், பாஷ்டோ மற்றும் பஞ்சாபி மொழிகளில் ஆளுமை பெற்றிருந்தார். மராத்தி, போஜ்புரி மற்றும் பாரசீக மொழிகளையும் அவர் நன்றாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

விளையாட்டுப் பிரியர்

திலீப் குமார் ஆரம்ப காலத்தில் கால்பந்தை மிகவும் விரும்பினார். அவர் வில்சன் கல்லூரி மற்றும் கால்சா கல்லூரியின் கால்பந்து அணியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினார்.

ஒருமுறை லக்னெவில் உள்ள கே.டி.சிங் பாபு ஸ்டேடியத்தில் நடந்த முஷ்டாக் அலி பெனிபிட் போட்டியில் விளையாடும்போது, அவர் ஒரு சிறந்த ஸ்கொயர் ட்ரைவ் ஆடினார். திலீப் குமாருக்குப் பூப்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் இருந்தது. அவர் பெரும்பாலும் கார் ஜிம்கானாவில் இசைக்கலைஞர் நஷாத்துடன் பேட்மிண்டன் விளையாடுவது வழக்கம்.

தேடி வந்த விருதுகள்

திலீப் குமார் 1991 இல் பத்ம பூஷண் மற்றும் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கௌரவமான பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றார். அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விருதை மும்பையில் உள்ள அவரது பாலி ஹில் இல்லத்தில் வழங்கினார்.

திலீப் குமாருக்கு 1995 ல் தாதாசாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசு அவருக்கு மிக உயர்ந்த சிவில் கௌரவமான 'நிஷான்-இ-இம்தியாஸ்' வழங்கிக் கௌரவித்தது. இந்தக் கௌரவத்தை ஏற்க பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடமிருந்து திலீப் குமார் அனுமதி பெற்றிருந்தார்.

1981 ஆம் ஆண்டில், அவர் மனோஜ் குமாரின் 'கிராந்தி' படப்பிடிப்பில் இருந்தபோது, ஷரத் பவாரும், ரஜ்னி படேலும் அவரை பம்பாயின் 'ஷெரிப்' ஆகச் சம்மதிக்க வைத்தனர்.

அரசியல் போட்டியாளர்களான பால் தாக்கரே மற்றும் சரத் பவருடனும் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். தாக்கரேயின் இல்லமான 'மாதோஸ்ரீ'-யில் அமர்ந்து அவர் தாக்கரேவுடன் பல முறை பீர் குடித்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர, ஆப்கானிஸ்தானின் பேரரசர் ஜாஹிர் ஷா மற்றும் ஈரானின் ஷா ரஸா ஷா பஹல்வி ஆகியோரும் திலீப் குமாரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

ராஜ்கபூரின் பாராட்டு

முகலே ஆசமுக்குப் பிறகு, திலீப் குமார் அதிகம் புகழ் பெற்ற படம் 'கங்கா ஜமுனா'.

உத்தர பிரதேசத்திலிருந்து வெகு தொலைவில் எந்த தொடர்பும் இல்லாத ஒரு பதான், அங்குள்ள பேச்சுவழக்கை எவ்வாறு திறமையுடன் பேசினார் என்று பார்க்க அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்ததாக அமிதாப் பச்சன் கூறினார்.

பின்னர் இருவரும் ரமேஷ் சிப்பியின் 'ஷக்தி; படத்தில் ஒன்றாகப் பணியாற்றினர். அவரது சமகாலப் போட்டியாளரும் குழந்தைப் பருவ நண்பருமான ராஜ் கபூர் 'ஷக்தி' படம் பார்த்து விட்டு, பெங்களூருவிலிருந்து அழைத்து, 'நீ மிகச் சிறந்த கலைஞன் என்று இன்று முடிவாகிவிட்டது' என்று பாராட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :