ரிஷி கபூர்: பிரபல பாலிவுட் நடிகர் காலமானார் - ‘நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது’ - ரஜினிகாந்த்

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் இன்று (ஏப்ரல் 30) காலமானார்.

நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் இன்று மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார்.

ரிஷி கபூரின் சகோதரரான ரன்தீர் கபூர் இந்த செய்தியை பிபிசியிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

முன்னணி இந்தி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூரின் தந்தையான ரிஷி கபூர், பிரபல நடிகையான கரீனா கபூரின் உறவினர் ஆவார்.

கடந்த 2 ஆண்டுகளாக ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

2018ல் அவருக்கு புற்றுநோயால் கண்டறியப்பட்ட நிலையில், பல மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று 2019-இல் இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய ரிஷி கபூர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த பிப்ரவரியில் அவர் இரண்டுமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ராஜ் கபூரின் இரண்டாவது மகனான ரிஷி கபூர், கடந்த 1973-இல் வெளியான 'பாபி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னதாக ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்.

நேற்று பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இறந்த நிலையில், இன்று ரிஷி கபூர் இறந்த செய்தி அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூகவலைத்தளங்களில் தங்களின் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

ரிஷி கபூர் மரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''பன்முகத்தன்மை, அன்பு, கலகலப்பு இதுதான் ரிஷி கபூர். திறமைகளின் பெட்டகம். அவருடனான உரையாடல்கள் நினைவில் நீடிக்கும். திரையுலகம் மீது தீராக்காதலும் நாட்டின் வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர். மறைவு செய்தி அறிந்து மனவருத்தம் கொண்டேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இரங்கல்கள்'' என்று கூறியுள்ளார்.

ரிஷி கபூர் மரணம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது'' என்று கூறியுள்ளார்.

பிரபல நடிகையான மனிஷா கொய்ராலா வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ''இதனை நம்பமுடியவில்லை, அதிர்ச்சியாக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒரு கருப்பு நாளாக இது அமைந்துவிட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுல நடிகர்கள் மகேஷ்பாபு, பவன் கல்யாண் உள்ளிட்டோரும் தங்கள் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளனர்.

மும்பையில் தான் படித்த பள்ளியில் ரிஷி கபூர் மூத்த மாணவராக இருந்ததை நினைவுகூர்ந்த முன்னாள் மத்தியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர், ''இர்ஃபான் மற்றும் ரிஷி கபூர் ஆகிய இருவரும் மற்றொரு பயணத்தில் தற்போது உள்ளனர். நாம் அனைவரும் சென்றடைவதற்கு முன்னர் அவர்கள் ஒரு புதிய உலகில் காலடி எடுத்து வைத்துள்ளனர்'' என்று தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: