You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'முன்னாள் விடுதலைப் புலிகள்' 16 பேர் உள்பட 94 பேருக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு
பௌத்தர்களின் புனித நாளான பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
சிறு குற்றங்கள் மற்றும் யுத்த காலப் பகுதியில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 93 பேரை விடுதலை செய்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 16 தமிழ் அரசியல் கைதிகள் அடங்குவதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இந்த 16 பேரும் முன்னாள் விடுதலைப் புலிகள் என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.
ஏனைய 77 பேரும் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அவர் தெரிவித்தார்.
யுத்த காலப் பகுதியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசர கால சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட பல தமிழர்கள் இன்றும் சிறைச்சாலைகளில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில், சிறை வைக்கப்பட்டுள்ளதாக தமிழர் தரப்பு கூறி வருகின்றது.
இந்த நிலையிலேயே, குறித்த 16 தமிழ் அரசியல் கைதிகளும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 15 தமிழ் அரசியல் கைதிகளும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ் அரசியல் கைதியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஊடக சந்திப்பில் 93 பேரின் விடுதலை தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் அரசியல் கொலையுடன் தொடர்புடைய குற்றத்திற்காக மரண தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
துமிந்த சில்வாவிற்கும் பொது மன்னிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
இன்றைய தினம் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 94 பேரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
கொழும்பு புறநகர் பகுதியான முல்லேரியா பகுதியில் 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் தேதி இருதரப்பிற்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.
இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன், துமிந்த சில்வாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்து, துமிந்த சில்வா கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் தேதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த பல வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்