You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் காணாமல் போகும் தமிழ் மொழி; அதிகரிக்கும் சீன மொழி ஆதிக்கம்
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற பின்னணியில், இலங்கையின் அரசு அலுவல் மொழியான தமிழ் மொழி சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ் மொழி முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கும் பணிகளில் சீன மொழி பிரதான மொழிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது, தமிழ் மொழி முழுமையாக அனைத்து இடங்களிலும் புறக்கணிக்கப்படுகிறது.
சீனாவின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகள் காணப்படுகிறது, தமிழ் மொழி அங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பார்க் என கொழும்பு துறைமுக நகரில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், முதலில் சிங்களம், இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக சீன மொழியில் எழுதப்பட்டுள்ளது.
அந்த பெயர் பலகையில் எந்தவொரு தமிழ் எழுத்தும் காணப்படவில்லை.
ட்விட்டர் தளத்தில் வெளியான கொழும்பு துறைமுக நகரிலுள்ள தமிழ் மொழி அற்ற படங்களை மீள் பதிவேற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன், தமிழ் மொழி காணாமல் போயுள்ளது, விரைவில் சிங்கள மொழியும் காணாமல் போகும் என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து பதிலளித்த சீன தூதரகம், தாம் இலங்கையிலுள்ள மூன்று மொழிகளையும் மதிப்பதாக கூறியிருந்தது.
அதேவேளை, இலங்கை சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட டிஜிட்டல் நூலகமொன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கட்டடத்தின் நினைவு பலகையில், சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் சட்டத்தை வழிநடத்தும் ஒரு பிரதான இடத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை பெரும் பிரச்னையை தோற்றுவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்திருந்தன.
இவ்வாறான நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் இன்று காலை இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
தான் குறித்த இடத்தில் தமிழ் மொழியை காட்சிப்படுத்த உடன் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு உறுதியளித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், இன்று முற்பகல் குறித்த நினைவு பலகை, அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தன்னிடம் கூறியதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தான் அரசாங்கத்துடன் இருந்தாலும், தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகவே செயற்படுவதாக அவர் கூறுகின்றார்.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இலங்கையின் அரசு அலுவல் மொழிகள் என சிரேஷ்ட சட்டத்தரணி இ.தம்பையா தெரிவிக்கின்றார்.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக காணப்படுகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ள 28 பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, பெரும்பாலான இடங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றமை குறித்து, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் பிபிசி தமிழ் வினவியது.
இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
- சுந்தர்லால் பகுகுனா: இந்தியர்களுக்கு மரங்களை கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த மனிதர்
- கொரோனா துயரத்தில் உங்களுக்கு மாளிகை அவசியமா? பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் கேள்வி
- டயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்
- இஸ்ரேல் அரசு - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையில் உள்ளது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :