You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சரியா?
- எழுதியவர், ராமு மணிவண்ணன்
- பதவி, சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர்
2009ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றம் தொடர்பாக விசாரணைகள் நடத்த வேண்டும் என கோரி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2012லும் 2015லும் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய அரசு சார்ந்த கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றவில்லை. ஆகவேதான் மனித உரிமைகள் ஆணையத்தில் அடுத்த நகர்வாக தற்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை உலக நாடுகளின் பார்வைக்கும் மனித உரிமை மன்றத்தின் பார்வைக்கும் உட்பட்டது என்பதை தற்போதைய தீர்மானம் உறுதி செய்திருக்கிறது.
இம்மாதிரியான தீர்மானங்களால் என்ன பலன், என்ன செய்ய முடியும் என்று கேட்டால், இவை உலக அரங்கில் நடத்தப்படுகிற விவாதங்கள் என்பதைவிட, உலகின் எந்த மூலையிலும் நடத்தப்படுகிற அநீதிகளுக்கான எதிர்ப்புக் குரல் என்றுதான் சொல்ல வேண்டும். தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஏதோ ஒரு வகையில் நீதி தேட வேண்டும் என தமிழ் மக்கள் நினைக்கிறார்கள். உலக நாடுகள் இதற்கென ஒரு வரைமுறையை வைக்கிறார்கள். இலங்கையின் அரசியல், பிராந்திய அரசியல், உலக அரசியல் ஆகியவற்றுக்கெல்லாம் உட்பட்டு, இதனை எப்படிச் செய்ய முடியும் என்பதற்கான திட்டமாகத்தான் இந்த தீர்மானத்தை நாம் பார்க்க வேண்டும்.
2015ஆம் ஆண்டு தீர்மானம் வரும்போது, இந்திய அரசு அதற்கு ஆதரவாகத்தான் இருந்தது. அந்தத் தருணத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்திருந்தது. சிறிசேன புதிய அதிபராகப் பதவியேற்று இருந்தார். ஆகவே, அந்த ஆட்சி மாற்றத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் பல நாடுகளுக்கு இருந்தது. அந்த ஆட்சி நல்லிணக்கத்திற்குப் பாலமாக அமையுமென மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால், அது நடக்கவில்லை.
2015ஆம் ஆண்டின் அரசியல் சூழலை எடுத்துக்கொண்டால், இப்போதைய அரசியல் சூழல் மிக மோசமான சூழலில் இருக்கிறது. சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல் என்பது அதிகரித்திருக்கிறது. தவிர, எதற்குமே பொறுப்பு ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்த ஆண்டின் தீர்மானம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தத் தீர்மானத்தின் மூலம் முழுமையான நீதி கிடைக்காது என்ற எண்ணம் இருக்கிறது. அது ஒரு வகையில் சரியான பார்வைதான். அவர்கள் ஒரு அரசியல் நீதியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், மேற்கு நாடுகள் உட்பட மற்ற நாடுகள் இந்த விவகாரத்தை வேறு மாதிரி பார்க்கின்றன. அவர்கள், இந்தப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலையும் இலங்கை மீதான சீனாவின் தாக்கத்தையும் மையமாக வைத்து இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்.
இந்தியாவை ஒரு நட்பு நாடு போல இலங்கை பாவனை செய்கிறது. ஆனால், இந்தியாவைக் கையாள்வதில் அந்நாட்டுக்கு கடந்த 70 ஆண்டுகளாக ஒரு தீர்மானமான பார்வை இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கு இலங்கை குறித்து அப்படியான தெளிவான பார்வை ஏதும் கிடையாது. 1971ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் வந்தபோது, இலங்கை பாகிஸ்தானை ஆதரித்தது. 1962ஆம் ஆண்டு இந்திய - சீன யுத்தத்தின்போதும் இலங்கை சீனாவை ஆதரித்தது. ஆகவே இலங்கை எப்போதுமே தெளிவாக இருந்திருக்கிறது.
இந்தியா புவியியல் ரீதியாக நெருக்கமாக இருந்தும்கூட, கடந்த பத்தாண்டுகளில் சீனாதான் மிகப் பெரிய அளவிலான முதலீடுகளை அங்கு செய்திருக்கிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள் போன்ற கட்டமைப்புகளிலும் பெரும் உதவிகளைச் செய்திருக்கிறது. இந்த முன்னெடுப்புகளின் மூலம் இந்தியாவுக்கும் சில அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. இப்போது இலங்கை, சீனா சொல்வதைச் செய்யும் நாடாக மாறி வருகிறது.
இந்தச் சூழலில், எதற்காக இந்தியா கடந்த 30 ஆண்டுகளாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தையே வலியுறுத்தி வருகிறது எனத் தெரியவில்லை. இந்தியா சொல்லி, இலங்கை அதனை ஏற்காத நிலையில், தற்போது உலக நாடுகளின் மூலம் இலங்கையை இந்த திருத்தத்தை ஏற்க வைக்க முயற்சிக்கிறது இந்தியா. இது நம்முடைய பலவீனத்தைத்தான் காட்டுகிறது.
இந்த நிலையிலிருந்து இந்தியா மீள வேண்டும். இலங்கை - பாகிஸ்தான் - சீனா என்ற புவிசார் அரசியலைப் புரிந்து கொண்டு ஒரு நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 60 ஆண்டுகளாக status - quo மாறாமல், அதே இடத்தில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோமோ, அந்த இடத்தைப் பாதுகாத்தால் போதுமென நினைக்கிறார்கள். உலகில் நடந்துவரும் எந்த மாற்றத்தையும் நாம் ஏற்கவோ, அதனூடாக பயணிக்கவோ விரும்பவில்லை என்பதுதான் இதற்கு அர்த்தம்.
திபெத், நேபாளம், இப்போது இலங்கை என இந்தியாவைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இந்தியா இதேபோல்தான் செயல்படுகிறது. நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது என இந்தியாவின் அதிகாரவர்க்கம் கருதுகிறது. ஆனால், இந்தியாவின் சிந்தனைக்கும், அதன் அக்கறைகளுக்கும் எதிராகத்தான் எல்லாமே நடந்திருக்கிறது. இலங்கையிலும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்திய அரசாங்கம் இப்போதும் மெத்தனமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது.
க்யூபா, வெனிசுலா போன்ற நாடுகளும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருக்கின்றனர். இப்படி இடதுசாரி அரசுகள் இருக்கும் நாடுகளைப் பொறுத்தவரை, அவர்கள் இந்த விவகாரத்தை அமெரிக்காவை வைத்து அணுகுகின்றன. அமெரிக்கா ஆதரிக்கும் தீர்மானத்தை எதிர்ப்பது என்பதுதான் இவர்களது பார்வையாக இருக்கிறது.
இலங்கை தொடர்ந்து பன்னாட்டு அரசுகளின் பார்வையில் இருக்கிறது என்பதுதான் இந்தத் தீர்மானம் சொல்லும் முக்கியமான செய்தி. சாட்சியங்களையும் ஆவணங்களையும் சேகரிக்க வேண்டுமென மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிஷெல் போகெட் சொல்லியிருக்கிறார். அதற்கென மிகப் பெரிய தொகையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்போதும், இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லையென்றால் அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் இதனை குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லலாம்.
இது ஒரு நீண்ட காலப் போராட்டம். முதலில் பிராந்திய அளவில் நடந்தது. இப்போது சர்வதேச அளவில் நடக்கிறது. ஆனால், இதற்கான தீர்வு உடனடியாகக் கிடைக்குமா என்றால், அதற்குப் பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ராமு மணிவண்ணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர். அவர் பிபிசி தமிழின் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த நேரலை பேட்டியின் எழுத்து வடிவம் இது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: