You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது; இந்தியா புறக்கணிப்பு; சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு
இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது.
இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று கூறி அவற்றின் மீதான விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை பிரிட்டன் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் சென்ற பிப்ரவரியில் கொண்டு வந்தது.
இந்த தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் நிறைவேற்றப்படுவது இலங்கை அரசுக்கு ஒருவித சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதே வேளை, இதை அப்படியே செயல்படுத்த வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு இல்லை.
முன்னதாக, தீர்மானம் மீதான இறுதி வாதத்தின்போது இலங்கை அரசு சார்பில் பேசிய அதன் பிரதிநிதி, "எங்கள் நாட்டுக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த வரைவு தீர்மானம் பற்றிய அசாதாரணமான யோசனை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும். இதை அனுமதித்தால் இது மிகப்பெரிய ஆபத்தாக மாறும். இந்த தீர்மானத்தின்படி திட்டங்களை செயல்படுத்துவதாக இருந்தால், அதற்காக 2.8 மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி தேவை."
"அதுமட்டுமின்றி, ஏற்கெனவே இலங்கை அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில், இதுபோன்ற தீர்மானம், இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும். இலங்கை இந்த தீர்மானத்தை நிராகரிக்கிறது. இந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய இந்திய பிரதிநிதி, மனித உரிமைகளைக் காப்பதில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பொறுப்பு இருப்பதாக கூறினார். அண்டை நாடு எனும் அடிப்படையில் இறுதிப்போருக்கு பின்னர் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் வலியுறுத்துவதைப் போல, 13வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையின் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அவர் வலியுறுத்தினார்.
சீனா, பாகிஸ்தான் வாக்கெடுப்பின்போது கூறியது என்ன?
மனித உரிமைகள் என்ற பெயரில் இவ்வாறான தீர்மானங்கள் மூலம் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை தாங்கள் எதிர்ப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்த சீன அரசின் பிரதிநிதி, இந்தத் தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார். பிற நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்தார்.
இலங்கை அரசு அமைதி மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சீனா தரப்பில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானும் இந்தத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
சீனாவைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, இந்தத் தீர்மான வரைவு ''சர்வதேச தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதில் தோல்வியடைந்து விட்டது," என்று கூறினார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை அங்கீகரிக்கவும் இந்தத் தீர்மானம் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் முஸ்லிம்கள் உடல்கள் புதைக்க மறுக்கப்பட்டது குறித்தும் பின்னர் அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் பேசிய அவர், கொரோனாவால் இறந்த இஸ்லாமியர்கள் உடலைப் புதைக்க இலங்கை அரசு அனுமதி வழங்கியதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
வெனிசுவேலா, கியூபா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவு செய்துள்ளன.
இந்தியாவுக்கு தயக்கம் ஏன்?
இலங்கையின் பிரதான துறைமுகமாக இருக்கும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஏற்கனவே ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் அதை இலங்கை துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்று கூறிய இலங்கை அரசு இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து பிப்ரவரி தொடக்கத்தில் பின்வாங்கியது.
இந்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடர்வதற்கு இந்தியா முயற்சி செய்து கொண்டுள்ளது. எனவே இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தால் இந்த துறைமுகத் திட்டத்தில் பின்னடைவு ஏற்படும் என்று இந்திய அரசு கருதுகிறது.
ராஜபக்ஷ சகோதரர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தபின் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது இருநாட்டு வெளியுறவுத் தொடர்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது.
இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றன.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.
இந்த இரண்டு கூறுகளையும் கருத்தில் கொண்டே இந்திய அரசு இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என கருதப்படுகிறது.
மு.க. ஸ்டாலின், ப. சிதம்பரம் உள்ளிட்ட பல முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை இந்திய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தனர்.
இதேபோல உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்று, இலங்கை அரசுக்கு எதிராக 2014ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்திய அரசு விலகியிருந்தது.
அப்போது இலங்கைக்கு எதிராக 23 நாடுகளும் ஆதரவாக 47 நாடுகளும் வாக்களித்தன.
அதற்கு முன்பு 2012 இலங்கை போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக கட்சிகள் எதிர்ப்பு
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்த செயல்பாட்டை, தமிழக கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை விமர்சித்துள்ளன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
மத்திய அரசு முறையான விளக்கம் எதையும் சொல்லவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலாவது ஈழத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், உலகத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது மோதி அரசு. இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்கவில்லை. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்" என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது இலங்கை அரசு."
இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்iக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள்," என கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்ததன் மூலம் இலங்கையை மறைமுகமாக இந்தியா ஆதரித்திருக்கிறது," என தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு இடையிலான உள்நாட்டுப் போர்
இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இப்போரில் குறைந்தபட்சம் 1,00,000 பேர் கொல்லப்பட்டனர்.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை நசுக்கிவிட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மற்றும் பிற தொண்டூழிய அமைப்புகள் மதிப்பிடுகின்றன.
பல்லாயிரக் கணக்கானோர் இந்தப் போர் காலத்தில் காணாமல் போய்விட்டனர். இலங்கை அரசுக்கு எதிராகப் போராடிய தமிழ் மக்கள், இலங்கையிடம் சரணடைந்தவர்கள் அல்லது பிடிபட்டவர்கள் காணாமல் போனதற்கு, இலங்கை அரசுப் படையினர் மீது குறை கூறப்பட்டது.
அப்போதிலிருந்து, கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன தமிழர்களின் குடும்பம் நீதிகேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கோரி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ தமிழ் மக்கள் காணாமல் போனதற்கு, தான் பொறுப்பல்ல என தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: