You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது.
சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
கொழும்பு மயூரா பிளேஸ் ஆலயத்தில் வைத்து, இந்த கல் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சீதா அம்மன் கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லை, நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், இந்தியாவிடம் கையளித்துள்ளார்.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராமாயண வரலாறு காணப்படுகின்ற நிலையிலேயே, இலங்கையிலிருந்து கல்லொன்று, இந்தியாவில் அமைக்கப்படுகின்ற அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
"சீதா-எலிய"கோயிலிலிருந்து ஏன் கல் கொண்டு செல்லப்படுகிறது?
இந்தியாவிலிருந்து ராவணனினால் கடத்தப்படும் சீதை, இலங்கைக்கு அழைத்து வரப்படுகின்றார்.
இவ்வாறு அழைத்து வரப்படும் சீதை, அசோகவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது.
அசோகவனம் என கூறப்படும் இடமே, இலங்கையின் சீதா எலிய என நம்பப்படுகின்றது. இந்த வரலாற்று சான்றாக அமைக்கப்பட்ட கோவிலே, சீதா அம்மன் கோயிலாகும்.
இலங்கையின் மலையகத்தில் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் உள்ள கல் பாறைகளில் சில அடையாளங்கள் காணப்படுவதுடன், அது இராவணனின் கால் தடங்கள் என கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில், சீதா அம்மன் கோயில் நிர்மாணிக்கப்பட்டு, வழிபாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
இந்த வரலாற்று ரீதியிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்குடன், சீதை அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டதாக நம்பப்படும் சீதா எலிய (அசோக வனம்) ஆலய வளாகத்திலிருந்து இந்த கல் எடுக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சீதா அம்மன் ஆலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் கல் தொடர்பில், பிபிசி தமிழுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் கருத்து தெரிவித்தார்.
''இந்தியாவில் அமைக்கப்படவுள்ள ராமர் ஆலயத்திற்கான புனித கல், சீதா எலிய சீதை அம்மன் கோவிலிலிருந்து நேற்று வைபவ ரீதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்தியா உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை - இந்திய இராமாயணம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், இராமாயணத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் இலங்கையின் நுவரெலியாவிலுள்ள சீதா எலிய சீதை அம்மன் ஆலயமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.''
''அதேபோன்று, ராமருடைய ஆலயமாக கருதப்படுகின்ற அயோத்தியில் உள்ள ராமர் ஆலயம் முக்கியத்துவமான ஆலயமான கருதப்படுகின்றது. ஆககே புனித சின்னம் இங்கிருந்து அனுப்பப்படுகின்ற போது, இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலே ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும், அதேபோல் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஓர் உறவு பாலமாகவும் இது அமைந்திருக்கின்றது." என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- தடுப்புக் காவலில் மியான்மர் பிபிசி செய்தியாளர்; 'தொடர்பு கொள்ள இயலவில்லை'
- தொடரும் உள்ளடி: கொந்தளித்த திருமா - என்ன நடக்கிறது வி.சி.கவில்?
- கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `எடப்பாடியை நம்பினேன், ஏமாற்றிவிட்டார்!'
- தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: