You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜபக்ஷ சகோதரர்களை கடுமையாகச் சாடும் திமுக - மாகாண சபைகள் ஒழிப்பு விவகாரம்
இலங்கையில் மாகாண சபைகளை ஒழிக்க முற்படும் அந்நாட்டு அரசின் முயற்சியை தடுக்க இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலையீட்டை வலியுறுத்தியிருக்கிறார் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு.
இலங்கை அரசின் செயல்பாடு, அங்கு வாழும் தமிழர்களை இரண்டாம் தர குடிமகனாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி,"என்று அவர் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையை பறிக்கும் 'மாகாண ஒழிப்பு', இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோதி இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈழத்தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன் - "இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்" என்று இலங்கை அரசு அறிவித்து - அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக அரசின் மெளனம் குறித்து கேள்வி
"ராஜபக்ஷ சகோதரர்கள்" புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் - அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசும் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப் படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ - ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம் - அதுவும் 13-ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி - ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? என்று பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் - அப்படியொரு முடிவு, "இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று பாலு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கேரள சட்டமன்றம்
- சிரியாவில் பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- யேமென் போர்: விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 22 பேர் பலி
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்