You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்" - தீர்மானம் நிறைவேற்றிய கேரள சட்டமன்றம்
இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பேரவையில் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரித்தது.
ஒற்றை பாஜக உறுப்பினரான ஓ. ராஜகோபால் மட்டும் தீர்மானத்தில் இடம்பெற்ற அம்சங்களுக்கு எதிராக பேசினார். அதே சமயம், தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தபோது அவர் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மேலும் அரசின் முடிவை ஆதரிப்பதாகக் கூறிய அவர், வாக்கெடுப்பை தவிர்ப்பதாகக் கூறினார்.
முன்னதாக, வேளாண் சட்டங்களுக்கு எதிரான கேரள சட்டமன்றத்தின் நிலைப்பாட்டை மத்திய அரசிடம் தெரிவிப்பதற்காக அதன் சிறப்பு அமர்வு வியாழக்கிழமை கூட்டப்பட்டது. இதில் முதல்வர் பினராயி விஜயன், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை கார்ப்பரேட்டுகளின் ஒருங்கிணைந்த வலிமை பலவீனப்படுத்தும் என்று தீர்மானம் குறிப்பிட்டது.
"விவசாயிகளின் பாதுகாப்பை மூன்று சட்டங்களும் உறுதி செய்வதாக இல்லை. அரசாங்கம் கொள்முதல் செய்வதிலிருந்து விலகும் சூழ்நிலையில், அது உணவு மற்றும் உணவுப் பாதுகாப்பு, விநியோகித்தை பாதித்து பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தைப்படுத்துதலை தீவிரமாக்க வழிவகுக்கும், "என்று தீர்மானம் கூறியது.
"மேலும், அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் விவசாயம் என்பது ஒரு மாநில விவகாரம். மாநிலங்களை கடுமையாக பாதிக்கும் விஷயம் என்ற வகையில், இந்த மூன்று மசோதாக்கள் பற்றி மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கூட பரிந்துரைக்கப்படாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன," என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் இந்த சிறப்பு அமர்வை டிசம்பர் 23ஆம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அமைச்சரவையின் பரிந்துரையை நிராகரித்ததால் தாமதமாக இப்போது சிறப்பு அமர்வு நடந்துள்ளது.
முன்னதாக, சட்டமன்றத்தில் தீர்மானத்துக்கு ஏற்பட்ட கருத்தொற்றுமையை ஏற்று வாக்கெடுப்பை தவிர்த்ததாக பாஜக உறுப்பினர் ஓ. ராஜகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், "பிரதமர் நரேந்திர மோதியின் எந்தவொரு முயற்சியையும் எதிர்கட்சிகள் கண்மூடித்தனமாக எதிர்க்கின்றன," என்று ராஜகோபால் கூறினார்.
"போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு மோதி அரசு தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை. பேச்சுவார்த்தைக்கு முன்பே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்," என்று ராஜகோபால் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால், அது கேரளா போன்ற மாநிலங்களுக்கான உணவு தானிய விநியோகத்தை மோசமாக பாதிக்கும்" என்று கூறினார்.
வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு விலகி இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவாது, ஆனால் கார்பரேட்டுகள் மட்டுமே அவற்றால் பயன் பெறும் என்று தெரிவித்தார்.
கேரள அரசு ஏற்கனவே 16 காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் . விவசாயிகளுக்கு உதவ நெல்லுக்கு அதிக ஆதரவு விலையையும் தரும் முயற்சிகளை அரசு தொடங்கி விட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு மாற்றாக ஒரு சட்டத்தை இயற்றும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் கே.சி. ஜோசஃப், "சிறப்பு அமர்வை கூட்ட அனுமதி மறுத்த ஆளுநரின் நடவடிக்கை, அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்," என்று தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் பெயரை குறிப்பிட்டு கண்டன வரிகள் இடம்பெற வேண்டும் என்று ஜோசஃப் வலியுறுத்தினார். ஆனால், அதை ஆளும் அரசு ஏற்கவில்லை.
பிற செய்திகள்:
- சிரியாவில் பேருந்து மீது திடீர் தாக்குதல்: 28 பேர் பலி
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- யேமென் போர்: விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 22 பேர் பலி
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
- குரேஷியா நிலநடுக்கம்: 7 பேர் பலி, ஒரு நகரில் பாதி அழிந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்