கொரோனா வைரஸ்: கோவிட்-19ஆல் இறந்த இஸ்லாமியர்கள் உடல்களை புதைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐநா கடிதம்

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கையில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது.

கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை உடல்களை நல்லடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சர் அல் சப்ரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருந்தார்.

எனினும், இஸ்லாமியர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் அமைச்சரவையில் எட்டப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவங்க கூறியிருந்தார்.

சுகாதார தரப்பின் பரிந்துரைகளுக்கு அமையவே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

Hanaa singer

பட மூலாதாரம், Hanaa singer twitter page

கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை நல்லடக்கம் செய்து தொடர்பிலேயே இந்த கடிதம் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம்செய்து குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்து குறித்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்து குறித்த அரசாங்கத்தின் கருத்தை தான் ஆர்வத்துடன் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அகற்றுவதற்கான ஒரே வழி, அவர்களின் உடல்களை தகனம் செய்வதே என்ற இலங்கை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் கரிசனையை வெளியிட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தொற்று நோய்களினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களிலிருந்து தொற்று பரவுவதை தடுப்பதற்கு, அந்த உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான நம்பிக்கையானது, ஆதாரங்கள் அற்றவை என அவர் தெரிவிக்கின்றார்.

உடல்களை தகனம் செய்வது என்பது, சமூகத்தின் தெரிவு எனவும் அவர் கூறுகின்றார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை, அவர்களின் குடும்பத்தாரது விருப்பத்திற்கு அமைய, பொருத்தமான நெறிமுறைகளுடன் தகனம் அல்லது புதைக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்போரின் பூதவுடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை குறித்து பலர், தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வது சமூக ஒற்றுமைக்க எதிர்மறையாக தாக்கத்தை செலுத்துகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.

நோய் அறிகுறிகளை கொண்டவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தவறும் சந்தர்ப்பங்களும் இதனால் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பமும் உள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

கொரோனா வைரஸ்

இலங்கையின் தற்போதுள்ள நடைமுறைகள் குறித்து மறு ஆய்வு செய்து, கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் புதைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் பூதவுடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே, இறுதித் தீர்மானத்தை எட்ட முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தனக்கு மேலும் பல அறிக்கையை கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு, தனக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பவித்ரா வன்னியாராட்ச்சி கூறுகின்றார்.

இந்த நிலையில், குழுவின் அறிக்கை தன்னிடம் கிடைத்தன் பின்னரே இறுதித் தீர்மானத்தை எட்ட முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி தெரிவிக்கின்றார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :