தமிழ் மொழிப்பாடம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் புறக்கணிப்பா? - மு.க. ஸ்டாலின், கி.வீரமணி, வைகோ எதிர்ப்பு

தமிழ்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், வகுப்புக்கு 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதை தினத்தந்தி, தினமலர் போன்ற முக்கிய நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தனியொரு விதி உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"அதுவும் கூட அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு "தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்", "வாரத்தில் 2, 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்", "ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடவேண்டும்" என்றெல்லாம் கடும் நிபந்தனைகளை விதித்து அன்னைத் தமிழின் மீது அகிலம் போற்றும் செம்மொழி மீது, வெறுப்பைக் காட்டியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு."

"இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழ் பயிற்றுவிப்பதுகூட 6ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்கவேண்டும் என்று, தாய்மொழியை கற்பதற்கு எதிரான ஒரு நிரந்தரத் தடையை விதித்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழக மாணவர்களுக்கு பயன்பட்டுவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைப்பது, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்," என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

MK STalin

பட மூலாதாரம், MK STalin Facebook page

"6ஆம் வகுப்பில் இருந்துதான் தாய் மொழி கற்றுக்கொடுக்கப்படும் என்ற இந்த விதி, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கே விரோதமாக இருக்கிறது. தாய்மொழி கற்றுக் கொடுக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது; 5ஆம் வகுப்பு வரை தேவைப்பட்டால் 8ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்"என்று புதிய கல்விக் கொள்கையில் அறிவித்தது, இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சக எண்ணத்துடன் ஏமாற்றுவதற்கு என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி கூறுகிறது.

"தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே தமிழ் மொழி பயிற்றுவிக்க உத்தரவிடவேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

'தமிழக அரசு எதிர்க்க வேண்டும்'

தமிழக சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து தமிழ் விருப்பப் பாடம் என்னும் அறிவிப்பை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி எதிர்த்துள்ளதை இந்து தமிழ் திசை செய்தியாக வெளியிட்டுள்ளது.

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார்.

"இரண்டே மொழிதான் தமிழ்நாட்டில். தமிழும் - ஆங்கிலமும்தான் என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில், இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு நியாயம் கற்பிப்பது போன்ற தோற்றப் பிழையை உண்டாக்கும் வகையில் தமிழ்நாட்டில் மத்திய அரசு பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படும் என்கிறது மத்திய அரசு."

"மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் மாநிலங்களில் இயங்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தின் நிலை."

"தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசுக்குக் கட்டுப்பட்ட பள்ளிகள் சிபிஎஸ்இ முறையில் மாற்றப்பட மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று ஆக்கிக் கொண்டார்கள். சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்பட்டால், தமிழைப் படிக்கவேண்டிய அவசியம் இல்லையல்லவா?"

"இந்தி, சமஸ்கிருதம் என்பது வெறும் மொழித் திணிப்பல்ல - கலாசாரப் படையெடுப்பே - இதில் தமிழ்நாடு ஏமாறாது - ஏமாறவும் விடமாட்டோம். தமிழ்நாடு அரசு - மத்திய அரசின் கேந்திரியக் கல்வி நிலையங்களில் தமிழ் பற்றிய ஏமாற்றும் தந்திர முடிவை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்து உடனடியாக அறிவித்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் " என்று கி.வீரமணி அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

'மாநில அரசுகளின் நிதி'

வைகோ

மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் இப்பள்ளிகளில், தாய்மொழிக் கல்விக்கு இடம் இல்லை என்று புறக்கணிப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளதாக இந்து தமிழ் திசையின் இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

"குறிப்பாக, தமிழ் மொழியின் மீது பாஜக அரசு காட்டும் வன்மம், தமிழக மக்களுக்குப் புரியாதது அல்ல. இதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்யவும், மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்றுவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்," என்று வைகோ தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: