இந்தியா - சீனா எல்லை மோதல்: அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

சிச்சுவான்-திபெத் ரயில்வே

பட மூலாதாரம், CHINA NEWS SERVICE / GETTY IMAGES

படக்குறிப்பு, சிச்சுவான்-திபெத் ரயில்வே
    • எழுதியவர், சர்வப்ரியா சங்வான்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் சமீபத்தில் சிச்சுவான்-திபெத் ரயில்வே திட்டத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். யான்-லின்சி ரயில் பாதை திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்துடன் திபெத்தின் லின்ஜியை யான்-லின்சி ரயில் பாதை இணைக்கும்.

திபெத்தின் இந்தப் பகுதி இந்தியாவின் அருணாசலப்பிரதேச எல்லைக்கு மிக அருகில் உள்ளது.

எல்லைப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கு இந்த ரயில் பாதைகள் மிகவும் முக்கியமானவை என்று ஷி ஜின்பிங் கூறுகிறார்.

சீனாவின் அதிகாரபூர்வ செய்தி ஊடகமான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்த முழு திட்டமும் 47.8 பில்லியன் டாலர் மதிப்புடையது.

இந்த ரயில் பாதையினால் , சிச்சுவான் தலைநகர் செங்டுவில் இருந்து திபெத்தின் லாசாவிற்கு பயணம் செய்ய 13 மணி நேரம் பிடிக்கும் , இது இப்போது 48 மணி நேரமாகும்.

இது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா ?

அருணாச்சலப் பிரதேசத்திற்கு அருகில் லின்ஜி என்ற இடம் உள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக கருதுகிறது, அதை இந்தியா நிராகரித்து வருகிறது.

"இது புதிய விஷயம் ஒன்றும் அல்ல, இந்தியா முன்பே அறிந்ததுதான் " என்கிறார் ஜேஎன்யூவில் சீன ஆய்வுகளின் பேராசிரியரான அல்கா ஆச்சார்யா.

இரு நாடுகளுக்கும் இடையே எல்லை இல்லை, இரு நாடுகளும் தங்களை வலுப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பைப் பற்றி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்கிறார் அவர். அதனால் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் ஏற்கனவே இந்தியாவுக்குத் தெரியும். கடந்த 7-8 ஆண்டுகளில் அது வேகம் பெற்றுள்ளது. ஆனால் சீனாவின் உள்கட்டமைப்பு இந்தியாவை விடச் சிறந்ததாகவும், விலை மதிப்பு மிக்கதாகவும் உள்ளது.

அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

பட மூலாதாரம், TPG / GETTY IMAGES

"சீனா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் போதெல்லாம் , அதில் ஒரு இராணுவ கண்ணோட்டமும் உள்ளது," என்கிறார் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் பேராசிரியர் புன்சுக் ஸ்தோப்தான்.

இதன் பொருள், உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் சீனா இந்தியாவின் எல்லை வரை ஏவுகணைகளைக் கொண்டு வர முடியும் என்கிறார் அவர். பின் அவர்களுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை. ஏவுகணைகளை வைத்தே அவர்கள் குறி வைக்கலாம். கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற இடங்களில் இது போல நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் முதலில் ரயில் பாதையை உருவாக்குகிறார்கள், இது அவர்களின் ஏவுகணை திறனை அதிகரிக்கிறது. இங்கு இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக அணு குண்டு பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன . சீனாவின் உத்தி என்னவென்றால் , அணு ஆயுதங்கள் பற்றி பேசாது , ஆனால் நான்குபுறமும் சூழ்ந்து விடும். "

இந்த ரயில்வே திட்டத்தைப் பற்றி இந்தியா ஏன் கவலைப்பட வேண்டும்?

பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவில் இந்த பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நீரை தன்பக்கம் திசை திருப்ப சீனா விரும்புவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த திட்டம் முடிந்த பிறகு, இந்த பகுதியில் சீன இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார். முன்பு சீன இராணுவம் அங்கு அடைய 36 மணி நேரம் ஆகும், இப்போது அது 9-10 மணி நேரத்தில் அடைய முடியும் , அதாவது, விரைவாக படைகளை நிறுத்த முடியும். மேலும், சீனாவின் டாங்குகள் மற்றும் ஏவுகணைகளை இந்திய எல்லைக்கு எளிதாக கொண்டு வந்து விடமுடியும்.

திபெத்தில் வளர்ச்சி ஏற்படுத்துகிறது சீனா

திபெத்தில் உள்கட்டமைப்பை உருவாக்க சீனா பல தசாப்தங்களாக உழைத்து வருகிறது என்று ஜேஎன்யு பேராசிரியர் பி.ஆர். தீபக் சுட்டிக் காட்டுகிறார்.

"1962 க்கு முன்னர், சீனா அதன் சிச்சுவான் மாகாணத்திற்கு அருகில் உள்ள கிழக்கு திபெத்தில் சாலைகளை அமைத்து வலை விரிக்கத் தொடங்கியது," என்று அவர் கூறுகிறார். இந்தப் பகுதியை அடைவது ஆபத்தானது என்று சீனா அறிந்திருந்தது.இது பீடபூமி பகுதியாகும் . 1951ல் திபெத்தில் சீனப் படைகள் நுழைந்தபோது, திபெத்தியர்கள் உயரமான மலைகளில் ஏறி சீன ராணுவத்தைத் தாக்கினர். திபெத்திய ராணுவம் பலவீனமாக இருந்தாலும், சீன ராணுவம் செல்ல முடியவில்லை. இதனால், அவர்கள், சாலைகளை உருவாக்கி, துறைகளைக் கைப்பற்ற உத்தி வகுத்தனர்.

அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

பட மூலாதாரம், FREDERIC J. BROWN / GETTY IMAGES

1957-ல் சீனா அக்சாய் சின் சாலையை உருவாக்கி விட்டது என்றும், அப்போது இந்தியா-சீனா உறவுகள் சீர்குலைந்து கொண்டிருந்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என்றும் பேராசிரியர் தீபக் குறிப்பிடுகிறார்.

சீனாவின் பதிமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திபெத் எல்லையில் உள்கட்டமைப்பு என்பது முன்னுரிமையாக இருந்தது என்றும் சீனா 20 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்தது என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் ஷி ஜின்பிங் பேசும் ரயில்வே திட்டத்தின் பட்ஜெட் இதிலிருந்து வேறுபட்டது.

"திபெத் பகுதியில் 90,000 கி.மீ. நீளமுள்ள சாலை வலையமைப்பை சீனா உருவாக்கியுள்ளது. பெய்ஜிங்கில் இருந்து லாசாவிற்கு பயணம் செய்யும் நெடுஞ்சாலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது, 3,000 கிலோமீட்டர்களை 3-4 நாட்களில் கடக்கலாம். "

இந்தியாவின் உள்கட்டமைப்பு குறித்து சீனாவிற்கு பிரச்னையா?

கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பகுதிகளில் இந்தியா தனது உள்கட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று பேராசிரியர் ஸ்டோப்டன் கூறுகிறார்.

"லடாக்கில் உள்ள டோர்புக்கிலிருந்து தாலத்பெக் ஓல்டி வரை 255 கி.மீ. முக்கிய சாலை போடப்பட்டு வருகிறது, , சீனா இதற்கு கருத்து தெரிவித்தது , அதன் பின்னர்,இப்போதுவரை , இந்தியா-சீனா மோதல் நடந்து கொண்டிருக்கிறது, இதற்கு ஒரு தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். புதிய விமான நிலையங்கள், சாலைகள், கட்டப்பட்டு வருகின்றன , சமீபத்தில் லடாக்கில் , அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.

தவுலத்பெக் ஓல்டி சாலை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாதை என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். இது LAC க்கு முற்றிலும் இணையாக செல்கிறது, இது வழியே ,இந்திய இராணுவம் திபெத் ஜின்ஜியாங் நெடுஞ்சாலையை அணுகுவதற்கு சாத்தியமாகிறது.

ஆனால்,சீனாவை பார்க்கும் போது , இந்திய எல்லையில், மிக குறைவான திட்டங்கள் தான் உள்ளன என பேராசிரியர் தீபக் கூறுகிறார் .

அவர் கூறுகையில், "இந்தியாவின் எல்லைத் திட்டங்கள் 60-70 ஐ தாண்டாது, அவையும் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. சில திட்டங்களில் ஆய்வு கூட செய்யப்படவில்லை. இவற்றில் 2-3 திட்டங்கள் ரயில்வே திட்டங்கள் ஆகும். 2020ஆம் ஆண்டு ஆய்வுகள் முடிக்கப்பட வேண்டும், இதுவரை முடிக்கப்படவில்லை. ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள அடல் சுரங்கப்பாதையும் பல முறை திறக்கப்பட இருந்தது, ஆனால் அது இப்போதுதான் தயாரானது, இது சமீபத்தில் பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டது. அப்படியிருக்குபோது, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளமுள்ள ரயில் பாதை அமைக்க எவ்வளவு காலம் ஆகும்? இதற்கு முன் இந்தியா இதை கவனத்தில் கொள்ளவில்லை. உதாரணத்திற்கு, அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூர் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆனால், 1962 ஆண்டிலேயே சீனா அங்கு பாதை ஏற்படுத்தி விட்டது. "

அருணாச்சலப் பிரதேசம் அருகே சீன ரயில் திட்டம் இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமா?

பட மூலாதாரம், TPG / GETTY IMAGES

தீர்வு கடினமா ?

இந்தியாவை சுற்றி வளைக்க சீனா இப்போது இதைச் செய்து கொண்டிருக்கிறது என்று இல்லை என்கிறார் பேராசிரியர் அல்கா ஆச்சார்யா.

"1980களில், ஒரு கருத்து வெளியிடப்பட்டது , அதில், சீனா இந்தியாவை சுற்றி வளைக்க முயற்சிக்கிறது, இந்தியாவின் அண்டை நாடுகளில் முதலீடு செய்து, துறைமுகங்களில் முதலீடு செய்ய முயற்சிக்கிறது," என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது இந்த பகுதியில் சீனாவின் இருப்பு அதிகரித்துள்ளது. இப்போது, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார இடைவெளி , கணிசமாக உள்ளது. எனவே இப்போது சீனா, குறிப்பாக இந்தியாவை குறிவைத்து,இதையெல்லாம் செய்கிறது என்றால், ஒரு விரிந்த கண்ணோட்டத்தில் பார்க்குபோது, அது போல் தெரியவில்லை".

ஆனால் இந்த புவிசார் அரசியல் விளையாட்டில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்போல் உள்ளதா?

பேராசிரியர் ஸ்டோப்டன் கூறுகிறார், "அமெரிக்க தேர்தல் முடிந்தால், இந்த பதற்றங்கள் குறையாலாம் அல்லது இந்தியாவும் எல்லைப் பகுதிகளில் அதன் வளங்களை உருவாக்க வேண்டும். எல்லையில் கட்டுமானப் பணிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்று சீனா கூறுகிறது, அதேபோல சீனாவும் நிறுத்த வேண்டும் என்று இந்தியா வாதிடுகிறது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியும், ஆனால் தற்போது எந்த ஒரு வழிமுறையும் இல்லை."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: