You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு: கண்டியில் பதவிப்பிரமாணம்
இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், இன்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்கள்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இந்த நிகழ்வு இன்று காலை இடம்பெறும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, புதிய அமைச்சரவையில், அமைச்சர் அந்தஸ்துள்ள 28 அமைச்சர்களும், 40 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பிடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையை அமைக்கும்போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் பணிகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு அமைச்சுக்கும் உரிய விரிவான பணிகளுக்கேற்ப முன்னுரிமையை வழங்குதல் மற்றும் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலகுபடுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமைச்சுக் கட்டமைப்பை வகுக்கும்போது, தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டமைப்பின் மூலம் கிராமிய, விவசாய அபிவிருத்தி மற்றும் கல்வித்துறையின் பல்வேறு துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயங்கள், முன்னுரிமைகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சட்ட அமைப்பு பற்றி உப தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
கடந்த 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இலங்கையின் 9-ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது.
எதிர்கட்சியாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது,
இலங்கையின் மிகப் பழைமையான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்த முறை தேர்தலின் ஊடாக எந்தவொரு ஆசனமும் கிடைக்காத நிலையில், தேசிய பட்டியல் ஊடாக மாத்திரம் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முறை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள அதேவேளை, ஏனைய சில கட்சிகள் வடக்கில் முன்னோக்கி வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பிற செய்திகள்
- உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா
- பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
- 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா கனிமொழி? வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் வரைபடத்தில் குஜராத்தின் ஜுனாகத் பகுதி: இம்ரான் கான் அரசுக்கு என்ன லாபம்?
- திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா: சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம்
- ஐக்கிய அரபு அமீரக விசா, பர்மிட்டுகளுக்கு 1 மாதம் காலக்கெடு நீட்டிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :