You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர்கள் கொலைக்கு மரண தண்டனை பெற்ற முன்னாள் ராணுவ சார்ஜன்ட் விடுதலை
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையிலிருந்து இன்று முற்பகல் அவர் வெளியேறியதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னக்கோன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
குறித்த சார்ஜன்ட் யுத்த காலத்தில் முன்னெடுத்த சிறந்த சேவை மற்றும் நன்னடத்தை ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டது.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட எட்டு பேரில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறு குழந்தையொன்றும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
யுத்தக் காலத்தில் கைவிடப்பட்ட தமது வீடுகளை பார்வையிடுவதற்கு ராணுவத்தின் அனுமதியுடன் சென்ற பொதுமக்களே மீள திரும்பவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டது.
இந்த சம்பவத்தின் போது, காயங்களுடன் தப்பியோடிய பொன்னுதுரை மகேஷ்வரன் என்ற நபர் வழங்கிய தகவல்களின் பிரகாரம், உயிரிழந்தவர்களில் சடலங்களை போலீஸார் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் 14 ராணுவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் தொடர்பிலான விசாரணைகளை போலீஸார் மற்றும் ராணுவ போலீஸார் முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பின்னரான காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதுடன், சட்ட மாஅதிபரினால் ஐந்து பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் கொழும்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றமொன்று நிறுவப்பட்டதுடன், அங்கு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24ஆம் தேதி விசாரணைகளை நடத்திய நீதிபதிகளினால் சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்கவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஏனைய நான்கு ராணுவத்தினரும் போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் - மிருசுவில் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த ராணுவ சார்ஜன்ட்க்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி ஏற்கனவே கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்த வழக்கில் தமிழர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: