காபூல் குருத்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ். இயக்கம் மற்றும் பிற செய்திகள்

உலகமே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் திணறி வரும் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு சீக்கிய கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி, நேற்று காலை காபூலில் உள்ள அந்த வழிபாட்டுத்தலத்தில் நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு படையினருடன் ஆறு மணி நேரம் நீடித்த சண்டையில் அந்த துப்பாக்கிதாரி கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொள்வதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: 51 பேரை கொன்றதை ஒப்புக்கொண்ட குற்றவாளி

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய நபர் தான் 51 பேரை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, மேலும் 40 பேரை சுட்டுக்கொல்ல முற்பட்டதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதான பிரெண்டன் டர்ரன்ட் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தன் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த இவரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி இந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதல் உலகையே அதிர செய்ததது.

கண்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுக் கொல்லும் காட்சிகளை இவர் ஃபேஸ்புக்கில் நேரலை செய்த நிலையில், அதை உடனடியாக அந்நிறுவனம் நீக்கிவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நியூசிலாந்து தனது நாட்டின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளை கடுமையாக்கியது.

கொரோனா வைரஸ் பாதிப்பதால் நியூசிலாந்து முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் காணொளி காட்சி வழியாக விசாரணையில் பங்கேற்றனர்.

கொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவிடும்

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தினக்கூலித் தொழிலாளர்களுக்கு அது சாதாரண விஷயமல்ல.

நொய்டாவில் உள்ள லேபர் சவுக் பகுதி, எப்போதும் நூற்றுக்கணக்கான ஆட்கள் கட்டட வேலைக்காக நின்றுகொண்டிருக்கும் ஒரு இடம். நான்கு சாலைகள் சந்திக்கும் டெல்லியின் புறநகர்ப் பகுதியான இது. கட்டட கான்ட்ராக்டர்கள் தொழிலாளர்களைத் தேர்வுசெய்வதற்காக இங்குதான் வருவார்கள்.

கொரோனா வைரஸால் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பாதிப்பு

பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை?

ஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கியமான உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம். ஆரோக்கியமான உணவு எது என்பதற்கான வரையறை என்ன?

அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். ஐம்பொறிகளையும் இயக்குவது நாம் உண்ணும் உணவே. தலைமுடி, நகம் சருமத்தின் தன்மையை வைத்தே ஒருவரின் ஆரோக்கியத்தை மதிப்பிடலாம் என்றும் சொல்வதுண்டு. இவை வெறும் வாய்மொழிகள் அல்ல, ஆழமான அர்த்தங்களைக் கொண்டவை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: