You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: பிரிட்டன் இளவரசர் சார்லஸ் பாதிப்பு - மேலும் சில செய்திகள் Coronavirus World updates
பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 71 வயது. ஆனால், அவர் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இளவரசர் சார்லஸ் மற்றும் சீமாட்டி கமிலா தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும், கடந்த சில தினங்களாக சார்லஸ் வீட்டில் இருந்தபடியே தமது அலுவல் பணியை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இளவரசரும் சீமாட்டியும் ஸ்காட்லாண்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்கிறது அதிகாரப்பூர்வ தகவல்கள்.
யாரிடமிருந்து இளவரசருக்கு கொரோனா தொற்று வந்திருக்கும் என்று கணிப்பது கடினம். கடந்த சில தினங்களில் அவர் பலரை சந்தித்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
செளதியில் முதல் கொரோனா மரணம்
முதல் கொரோனா வைரஸ் உயிரிழப்பை செளதி அரேபியா பதிவு செய்துள்ளது. உயிரிழந்தவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 51 வயது ஆண் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர் சௌதியின் புனித நகரான கருதப்படும் மெக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இரானுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக செளதி உள்ளது. அந்நாட்டில் நேற்று மட்டும் 205 பேருக்குப் புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டிலுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 767-ஆக உயர்ந்துள்ளது.
செளதி அரேபியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்க, அந்நாடு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக அடுத்த மூன்று வாரங்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவையும் செளதி அரசு பிறப்பித்துள்ளது.
மெக்கா மற்றும் மதீனாவைத் தவிர மற்ற அனைத்து மசூதிகளும் அங்கு மூடப்பட்டுள்ளன. அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுவரை
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் ஸ்பெயினில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2991-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,058-ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு விதித்த சில கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஸ்பெயின் மக்களை அந்நாட்டு காவல் துறையினர் பொறுப்பற்ற மக்கள் என விமர்சித்துள்ளனர்.
அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலர், மருத்துவர்களின் அனுமதி இன்றி அவர்களே வீட்டிற்கு சென்றதாக அந்நாட்டு காவல் துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
நியூயார்க்கில் அதி வேகமாக பரவும் கொரோனா
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிஃபோர்னியாவில் மிகவும் மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
அமெரிக்காவில் மொத்தம் 55,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 25,000 பேர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.
நியூயார்க்கில் மட்டும் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 800 ஆக அதிகரித்துள்ளது.
நியூயார்க்கில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நியூயார்க் ஆளுநர் மருந்துகளை விரைவாக தேவையான மருந்துகளை அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புல்லட் ரயில்களை விட கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு வருத்தம் தெரிவித்தார். 30,000 சுவாச கருவிகள் தேவைப்படும் இடத்தில் வெறும் 7000 சுவாச கருவிகள் மட்டுமே இருக்கிறது என்று தரவுகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
உலக சுகாதார மையமத்தின் தரவுகள்படி கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சீனா இருக்கிறது. இரண்டாவதாக ஐரோப்பாவின் இத்தாலியில் நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த வரிசையில் அடுத்து நியூயார்க் இடம்பெறலாம் என்ற அச்சம் நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இதனிடையே இத்தாலி தொடர்ந்து கடும் பாதிப்பை சந்தித்து வருகைத்து. அந்நாட்டின் சாலைகள் தொடர்ந்து வெறிச்சோடி காணப்படும் நிலையில், அலுவலகங்கள், விடுதிகள், திரையரங்குகள் என பொது இடங்களில் பல வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் உள்ளது.
செளதி அரேபியாவில் முதல் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் செளதி அரேபியாவில் முதல் உயிரிழப்பு நேர்ந்துள்ளது. அஃப்கானிஸ்தானை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இரானிற்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக செளதி அரேபியா கருதப்படுகிறது.
10 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஜோர்டான் நாட்டில் அந்நாட்டு அரசு மக்களுக்கு மருந்து, உணவு, எரிவாயு என அத்தியாவசிய தேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளது. ஜோர்டான் நாட்டின் பல இடங்களில் மக்கள் நீண்ட இடைவெளியில் வரிசையாக நின்று உணவுகளை வாங்கி செல்லும் காட்சிகளை அந்நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
விதிகளை பின்பற்றும் வகையில் நீண்ட இடைவெளிவிட்டு வரிசையில் நின்று உணவு வாங்கிச்செல்லும் மக்களை அந்நாட்டு அமைச்சர் பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே நகர வீதிகளில் நடமாட தடை விதித்த ஜோர்டான், தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிவித்தது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலகிலேயே மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த நாடாக ஜோர்டான் அறியப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ஓர் ஆண்டு கால சிறை தண்டனையை அந்நாடு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் நிலை என்ன?
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 878 ஆக உள்ளது. இந்தியாவை காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பாகிஸ்தான் அரசு இன்னும் அந்நாட்டில் முழு அடைப்பை அறிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சில மாகாணங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19. எனவே அடுத்த இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டு மக்கள் இரவு நேரத்தில் வெளியே நடமாட தடை வித்தித்துள்ளது. மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை மக்கள் நடமாட தடை என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச எல்லையில் தவிக்கும் இந்திய மாணவர்கள்
வங்கதேச எல்லையில் இந்திய மருத்துவ மாணவர்கள் 100 பேர் இந்திய எல்லைக்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் தங்கள் எல்லையிலிருந்து வெளியேற வங்கதேச அரசு அனுமதி வழங்கிவிட்டதாகவும், ஆனால் இந்திய அரசு அவர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் இந்திய அரசின் நிர்வாகத்துக்கு ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு பிறகு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் இந்த அனுமதி கொரோனா வைரஸின் மையமாக கருதப்படும் வூஹான் நகருக்கு வழங்கப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: