கொரோனா வைரஸ்: இலங்கையில் பாதிப்புக்குள்ளான முதல் இலங்கையர்- கள நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவிக்கின்றது.

சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றிய 52 வயதான ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையருக்கான சிகிச்சைகள் உரிய முறையில் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கை

கொரோனா வைரஸ் (கொவிட் - 19) இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியை மேற்கோள்காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுகின்றமையினால், அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

அத்துடன், இலங்கையில் வைரஸ் தொற்று பரவுவதற்கு காரணமாக இத்தாலி சுற்றுலாக்குழு பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கான முறையான திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட வைரஸ் தொற்று பரவும் நாடுகளிலிருந்து வருகைத்தரும் நபர்கள், தொற்று நோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கை நேற்றைய தினம் (10) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து வருகைத் தந்தவர்கள், மட்டக்களப்பு பகுதியிலுள்ள பெட்டிக்ளோ கெம்பஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு மத்திய நிலையத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை ராணுவத்தின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது.

சீனா நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இந்த வைரஸ் தொற்றுக்குள் முதல் முதலாக இலங்கையில் இலக்காகியிருந்தார்.

குறித்த பெண் அங்கொடை பகுதியிலுள்ள ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டதன் ஊடாக முழுமையாக குணமடைந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று இலக்கான முதலாவது இலங்கை பிரஜை இத்தாலியில் கடந்த இரண்டாம் தேதி அடையாளம் காணப்பட்டதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும பிபிசி தமிழுக்கு அன்றைய தினம் உறுதிப்படுத்தினார்.

குறித்த இலங்கையருக்கான சிகிச்சைகள் தொடர்ந்தும் அந்த நாட்டில் அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர், இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபர் தொடர்ந்தும் பல்வேறு வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 16 பேர் வரை சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு, ஆராயப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சுகத் சமரவீர தெரிவிக்கின்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: