யானைகள் இலங்கையில் அடுத்தடுத்து பலி - விஷம் வைத்து கொல்லப்பட்டதா ? - விரிவான தகவல்கள்

இலங்கையின் காடுகளில் வாழ்ந்து வருகின்ற காட்டு யானைகள் தற்போது பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருகின்றன.
புத்தளம் மற்றும் ஹபரண ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் கடந்த காலங்களில் மர்மமாக மரணிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே, காட்டு யானைகளுக்கான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹபரண - ஹிரிவடுன்ன - கும்பிகுளம் வனப் பகுதியில் மர்மமான முறையில் மரணித்த 7 காட்டு யானைகளின் உடல்கள் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
கடந்த 27ஆம் தேதி நான்கு யானைகளின் உடல்களும், 28ஆம் தேதி மூன்று யானைகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு இறந்த அனைத்து யானைகளும் பெண் யானைகள் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் மரணித்துள்ள யானைகளில் மூன்று யானைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைகள் மரணித்தமைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிகிரிய வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள், இராணுவம், ஹபரண போலீஸார் இணைந்து பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் மரணித்த யானையின் குட்டியொன்று தாய் யானையை விட்டு பிரியாது சுற்றிக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
எனினும், மரணித்த யானையின் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அந்தக் குட்டி யானையை வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தொடர்ச்சியாக யானைகள் மரணிக்கும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக கிரிந்தலை, அநுராதபுரம் மற்றும் வடமேல் மாகாண மிருக வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு குழுக்கள் வருகைத் தந்துள்ளன.
இந்த யானைகளின் மரணத்திற்கு எவரேனும் காரணம் என கண்டறியப்படும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலன்னறுவை வலயத்திற்கு பொறுப்பான வனவிலங்கு பிரதி பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.ஜே.விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம் - நவகத்தேகம பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யானையொன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது,
அந்த யானையின் ஒரு தந்தம் வெட்டியெடுக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் யானை மீதான பிரேத பரிசோதனையின் போது, யானையின் உடலில் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டதாக விசாரணைகளை நடத்திய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதன்படி, கடந்த ஓரு வார காலப் பகுதிக்குள் மர்மமான முறையில் 8 யானைகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
’பின்னணி புரியவில்லை’
"இலங்கையில் ஒரே தடவையில் யானைகள் கூட்டாக கொல்லப்பட்ட முதலாவது சம்பவம் இது." என சூழலியலாளர் சஞ்ஜீவ ஷாமீகர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கையில் காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் பல வருடங்களாக நடைபெற்று வருகின்ற போதிலும், ஒரே சமயத்தில் இத்தனை யானைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரணிக்கவில்லை என அவர் கவலை வெளியிடுகின்றார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, யானைகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையில் காணப்பட்ட பிரச்சினைகளின் போது, கடந்த காலங்களில் தனியாக நடமாடும் ஆண் யானைகளே அதிகளவில் மரணித்திருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், இன்று ஒரே தடவையில் பெண் யானைகள் கொல்லப்பட்டுள்ளமையின் பின்னணி என்னவென புரியவில்லை எனவும் கூறினார்.

யானைகள் மர்மமாக மரணித்துள்ள பகுதியானது, கடந்த காலங்களில் அதிகளவில் காடழிப்பிற்கு உட்பட்ட பகுதி என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
குறித்த பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் நோக்குடன் அரசியல் பின்னணியில் இந்த யானைகள் கொல்லப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
யானைகள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்...
கடந்த ஐந்து முதல் ஆறு வருட கணிப்புக்களின் பிரகாரம், வருடமொன்றுக்கு பல்வேறு காரணங்களினால் 280 வரையான யானைகள் மரணிப்பதாக சஞ்ஜீவ ஷாமீகர தெரிவிக்கின்றார்.
இதன்படி, இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 278 காட்டு யானைகள் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மனிதர்களுக்கும், காட்டு யானைகளுக்கும் இடையிலான மோதல்களின் போதே அதிகளவிலான யானைகள் கடந்த காலங்களில் மரணித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த பிரச்சினைகளை தேசிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கின்றார்.
’காடுகள் அழிக்கப்படுவதே காரணம்’
இலங்கையில் 2010ஆம் ஆண்டு இறுதியாக நடத்தப்பட்ட கணிப்பின் பிரகாரம், 2.8 வீத ஈர வலய காடுகளும், 17 வீத உலர் வலய காடுகளும் காணப்படுகின்றன.
எனினும், பல்வேறு காரணங்களின் பிரகாரம், 17 வீதமான காணப்பட்ட உலர் வலய காடுகள் இன்று 15 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக சஞ்ஜீவ ஷாமீகர சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த நிலையில், அதிகளவிலான காட்டு யானைகள் ஈர வலய பகுதிகளிலேயே வாழ்ந்து வருவதாகவும், காடழிப்பு காரணமாக அவை மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையில் இறுதியாக நடத்தப்பட்ட ஆய்வுப்படி, 6000 முதல் 6500 வரையான யானைகளே வாழ்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
யானைகள் சுற்றுச்சூழலுக்கு பாரிய பங்களிப்பை செய்வதாக கூறிய அவர், வனப் பகுதிகள் செறிவடைவதற்கு யானைகளின் பங்களிப்பு மிக முக்கியமானது எனவும் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக யானைகள் உட்கொள்ளும் உணவு வகையில் 40 சதவீதம் மட்டுமே சமிப்பாடு அடையும் எனவும், எஞ்சிய 60 சதவீத உணவு உட்கொண்ட விதத்திலேயே கழிவாக வெளியேறும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறு வெளியேறும் கழிவில் அதிகளவிலான விதைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய சூழலியலாளர் சஞ்ஜீவ ஷாமீகர, அவ்வாறான விதைகளின் ஊடாக வனப் பகுதிகள் மீண்டும் செழிப்படைய செய்யப்படும் என குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, மரங்களின் கிளைகளை யானைகள் உடைத்து உட்கொள்கின்றமையினால், மரங்கள் மீண்டும் துளிர்விடுவதாகவும், அவை ஏனைய உயிரினங்களுக்கு சிறந்த உணவாக அமையும் எனவும் அவர் கூறுகின்றார்.
உலர் வலய காடுகள் பாதுகாக்கப்படுகின்றமைக்கு, யானைகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என சூழலியலாளர் சஞ்ஜீவ ஷாமீகர குறிப்படுகின்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












