தமிழர்கள் நிறைந்த இந்திய சர்ஃபிங் அணி - இலங்கையில் சர்ஃபிங் போட்டி

- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது.
World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது.
கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கு பற்றுகின்றன.
இந்தியாவிலிருந்து 06 பேரைக் கொண்ட அணி, இந்த உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் கலந்து கொண்டது.

பட மூலாதாரம், BBC
மூர்த்தி, அஜீஸ் அலி, சஞ்ஜே கெப்ரூ, மணிகண்டன், விக்னேஷ் மற்றும் பேர்சி ஆகியோர் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கோவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மூர்த்தி, அறுகம்பேயில் நடைபெறும் உலகளவிலான சர்ஃபிங் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்.
யார் இந்த மூர்த்தி?
சென்னை அருகே அமைந்துள்ள கோவளம் எனும் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 1982ஆம் ஆண்டு பிறந்தவர். அறுகம்பேயில் நடைபெற்று வரும் உலக சர்ஃபிங் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொள்ளும் இவரை சந்தித்துப் பேசியது பிபிசி தமிழ்.
தனது 20 வயது கடந்த நிலையிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் மூர்த்தி. கடல் சார்ந்த தொழில் தான் இவரின் வாழ்வாதாரமாக இருந்தது. மூர்த்தியின் பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, சிறு வயதிலிருந்தே தனது பாட்டியுடன்தான் இவர் வாழ்ந்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக, ஆறாம் வகுப்புடன் படிப்பையும் நிறுத்த வேண்டியதாயிற்று.

இனி மூர்த்தியே பேசுகிறார்.
"சிறு வயதிலிருந்தே கடலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் சர்ஃபிங் விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஜன்னல் பலகைகளைக் கொண்டு, கடலில் சர்ஃபிங் பழகி வந்தேன்.
2001ஆம் ஆண்டில் ஒரு நாள் நிறைய மீன்களைப் பிடித்த களைப்பில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது 'சர்ஃபிங் சுவாமி' என்று அழைக்கப்படும் ஜாக் ஹெப்னர் (Jack Hebner) எனும் அமெரிக்கரை சர்ஃபிங் படகுடன் சந்திக்கக் கிடைத்தது. அவருடன் பேசி அவர் வைத்திருந்த சர்ஃபிங் படகை சிறிது நேரம் தருமாறு கேட்டேன்; தந்தார். அதற்கு முன்னர் நான் சர்ஃபிங் படகைத் தொட்டதில்லை. 10 நிமிடங்கள் வரையில் அந்த படகைக் கொண்டு சர்ஃபிங் விளையாடினேன். அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது; என் மனதுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
2003ஆம் ஆண்டில் சொந்தமாக எனது பணம் 1500 ரூபாய் கொடுத்து, ஒரு சர்ஃபிங் படகு வாங்கி, பழகினேன். ஊரிலுள்ள பலர் என்னைக் கிறுக்கன் என்று கேலி செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்ளவேயில்லை. எனது இலக்கை நோக்கி நான் பயணித்தேன்.
அன்பளிப்பாகக் கிடைத்த படகு
இஸ்ரேலைச் சேர்ந்த சர்ஃபிங் விளையாட்டு வீரரும், இசைக்கலைஞருமான யோத்தம் என்பவரை 2008ஆம் ஆண்டு சந்திக்கக் கிடைத்தது. எனது வாழ்க்கையில் பெரும் மாற்றம் அதனால் ஏற்பட்டது. சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சர்ஃபிங் படகு ஒன்றை எனக்கு அவர் அன்பளிப்பாகத் தந்தார்.

பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் என்னை அவர் சந்தித்தார். அப்போது எனது நண்பர்கள் 10 பேர் என்னிடம் சர்.ஃபிங் பழகிக் கொண்டிருந்தனர். இத்தனை விரைவாக இவ்வளவு பேர் சர்ஃபிங் பழகியமை குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். இன்னும் பலருக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுப்பேன் என்று அவரிடம் கூறினேன். அதனைப் பார்க்க அவர் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். பின்னர் என்னைப் பற்றிய குறும்படம் ஒன்றினை அவர் எடுத்தார். எனக்காக உலக நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்தார். அவர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு க்ளப் மூலம் 30 சர்ஃபிங் படகுகள் எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது.
நிறைவேறிய கனவு
சர்ஃபிங் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. என்னைப் பற்றிய குறும்படத்தை பார்த்த இந்தியாவின் டி.டி. குரூப் நிறுவனத் தலைவர் அருண்வாசு எனக்கு உதவ முன்வந்தார். அவரின் உதவியுடன் 2012ஆம் ஆண்டு 'கோவ்லாங் பாயிண்ட் சர்ஃபிங் பள்ளி' (Covelong point Surfing School) ஒன்றை ஆரம்பித்தோம்.

எமது பள்ளியின் பெயரில் 2013 முதல் 2019 வரை சர்வதேச ரீதியாக ஏழு சர்ஃபிங் போட்டிகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்" என்று மூர்த்தி தெரிவித்தார்.
தன்னுடைய கிராமத்தவர்களுக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுக்க, தனது பள்ளியில் பணம் பெற்றுக் கொள்வதில்லை என்கிறார் மூர்த்தி. அந்த வகையில் தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு இதுவரையில் சர்ஃபிங் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலி, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச சர்ஃபிங் போட்டிகளில் மூர்த்தி பங்கேற்றுள்ளார். 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டிகளில் தான் முதலிடங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
2007ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மூர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் சர்ஃபிங் கற்றுக் கொடுத்திருக்கிறார் மூர்த்தி.
மீனவக் குடும்பத்தில் பிறந்ததில் இருந்து உப்புக்காற்றைச் சுவாசித்து, கடலலைகளுடன் விளையாடி வந்துள்ள மூர்த்தி, இப்போது தனது அணிக்குத் தலைமையேற்று உலகளவில் சர்ஃபிங் போட்டிகளில் சாகசம் நிகழ்த்தி வருகின்றார்.
இரண்டாம் சுற்று வரை மட்டும் முன்னேறிய இந்திய அணி

எவ்வாறாயினும், அறுகம்பேயில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில், இந்திய அணியினரால் இரண்டாம் சுற்று வரை மட்டுமே முன்னேற முடிந்தது.
மேற்படி போட்டித் தொடர் நான்கு சுற்றுகளாக ஆரம்பத்தில் நடைபெறும். அவற்றில் தேர்வானவர்கள் கால் இறுதிப் போட்டிக்குச் செல்வர். அதன் பின்னர் அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் இடம்பெறும்.
இந்த நிலையில், உலகளவில் சாம்பியன்களும் அவர்களுக்குச் சமனான திறமையுடையவர்களும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், இந்திய அணியினருக்குக் கலந்து கொள்ள சர்ந்தப்பம் கிடைத்தமை தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்திய சர்ஃபிங் அணியின் தலைவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் கூறினார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தாங்கள் இன்னும் கற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும், அதன் மூலம் தமது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












