You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜந்தா பெரேரா: 20 ஆண்டுகளுக்குபின் இலங்கையில் களமிறங்கும் பெண் ஜனாதிபதி வேட்பாளர்
- எழுதியவர், ரஞ்ஜன் அருண் பிரசாத்
- பதவி, இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக
இலங்கையில் இந்த ஆண்டு (2019) நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் பெண்ணொருவர் போட்டியிடவுள்ளார்.
அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டதன் பின்னர், இதுவரை நடைபெற்ற எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிடவில்லை.
1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளராக முதல் முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
இந்நிலையில் 1999ஆம் ஆண்டே இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டிருந்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் முழுமையான அரசியல் பின்புலத்தை கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் என்ற போதிலும், கலாநிதி அஜந்தா பெரேரா நேரடி அரசியல் பின்புலத்தை கொண்டவர் கிடையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
யார் இந்த கலாநிதி அஜந்தா பெரேரா?
1957ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி ஆஜந்தா பெரேரா பிறந்துள்ளார்.
தனது ஆரம்ப கல்வியை கொழும்பு விஸாக்கா கல்லூரியில் தொடர்ந்த அவர், தனது உயர்கல்வியை சென்னை குட்ஷெபட் கல்லூரியில் தொடர்ந்துள்ளார்.
அதன்பின்னர், இங்கிலாந்து சென்ற அஜந்தா பெரேரா, ஹரோ கல்லூரியில் தனது மேல் நிலை கல்வியை தொடர்ந்துள்ளதுடன், இங்கிலாந்தின் ஷெபில்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனிலுள்ள மியூமிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது உயர் படிப்பினை பயின்றுள்ளார்.
ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்ற அவர், மீண்டும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.
தான் சூழலியலாளராக தனது தொழில்துறையை தேர்ந்தெடுத்து நாட்டின் சுற்று சூழலை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட காரணம்?
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய விதம் தொடர்பில்தான் இந்த நாட்டிலுள்ள பல அரசியல்வாதிகளிடம் கூறிய போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாது செயற்பட்டமையே தான் அரசியலுக்குள் பிரவேசிக்க காரணம் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா குறிப்பிடுகின்றார்.
நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்காக தான் தனது பணத்தில் பஸ்ஸில் சென்று தேநீர் அருந்தி அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் பணம் உழைக்கும் நோக்கிலேயே செயற்பட்டதாக அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.
இந்தநிலைமையை மாற்றியமைத்து, நாட்டை சிறந்ததொரு பாதைக்குகொண்டு செல்வதற்காகவே தான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது பொறுப்புக்களை சரிவர முன்னெடுக்காத அரசியல்வாதிகளே தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் தமிழர்களின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பீர்கள்?
தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதாக கலாநிதி அஜந்தா பெரேரா நம்பிக்கை வெளியிடுகின்றார்.
தமிழர்களின் பிரச்சனைகளுக்காக தீர்வை தமிழர்களிடமிருந்தே பெற்று, அதற்கான தீர்வுத்திட்டத்தை தான் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலிருந்து வடக்கில் எவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்க முடியாது என கூறிய அவர், அதற்கான பொறுப்பை அந்த மக்களிடமே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி திட்டமொன்று முன்னெடுக்க வேண்டுமாயின், அந்த மக்களின் தேவையை அறிந்தே அந்த திட்டம் தமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான தலைவர்களை தமிழர்கள் மிக நீண்டகாலமாக தேடிய போதிலும், அவர்களுக்கு அந்த தலைமைத்துவம் கிடைக்கவில்லை என கூறிய அவர், தமிழர்களுக்கான தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களை அடிப்படை தேவைகள் மற்றும் அவர்களின் நாளாந்த சம்பள பிரச்சினை ஆகியவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்