You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறிசேன ராணுவ முகாம்களை சட்டபூர்வமாக்க விரும்புவது ஏன்?
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவமானது, தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அத்தியாவசியம் என்பதனை எடுத்துக்காட்டுவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு பிரதேசத்தினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு முகாம்கள் காணப்பட வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் வசம் காணப்படுகின்ற காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த அரச மற்றும் தனியார் காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு தமது அரசாங்கம் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது என கருதப்படும் காணிகளை அடையாளம் கண்டு, அது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் தேதிக்கு முன்னர் வடக்கு ஆளுநரிடம் கையளிக்குமாறும் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கில் தனியார் காணிகளில் நடத்தி செல்லப்படும் இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் தேவைப்படுமாயின், அதற்கான நட்டஈட்டை உரிய தரப்பிற்கு துரிதகதியில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த யுத்தக் காலத்தில் பாதுகாப்பு துறைகளால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாண நிலங்களில் 80.98 வீதம் அரச காணிகளும், 90.73 வீத தனியார் காணிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு பிரிவினர் என பலரும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்