You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெதர்மேன் பிரதீப் ஜான் பேட்டி: நீலகிரி, வேலூரில் பெய்தது ‘கிளவுட் பர்ஸ்ட்’ மழையா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது என மழைப்பொழிவு குறித்து பல செய்திகள் வெளியாகின. இந்த அதிகபட்ச மழை கிளவுட் பர்ஸ்ட் மழையாக இருக்கலாம் என சமூகவலைதளங்களில் பேசப்பட்டது.
சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் வானிலை பதிவுகளை சமூகவலைத்தளத்தில் பதிவிடும் தமிழ்நாடு வெதர் மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜானிடம் இது குறித்து விரிவாக பேசினோம். அவரின் பேட்டியிலிருந்து:
கே: நீலகிரி மாவட்டத்தில், அவலாஞ்சியில் பெய்த கனமழை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டது. இந்த மழை 'கிளவுட் பர்ஸ்ட்' மழை என்ற பெயரில் பேசப்பட்டது. கிளவுட் பர்ஸ்ட் மழை என்றால் என்ன?
ப: கிளவுட் பர்ஸ்ட் மழை என்பது ஒவ்வொரு பகுதியை பொறுத்தது. ஒரு பாலைவனப் பகுதியில், பத்து முதல் 20 மில்லிமீட்டர் மழை பெய்தாலே அது வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும். சிரபுஞ்சி பகுதியில் 300 முதல் 400 மில்லிமீட்டர் மழை பெய்தால் அது சராசரி மழையாக கணக்கிடப்படும். குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்தால் அதை கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்வார்கள்.
நீலகிரியில் பெய்தது கிளவுட் பர்ஸ்ட் மழை இல்லை. சாதாரணமாக பெய்யும் பருவகால மழைதான். நீலகிரியில் ஒரு நாள் 820 மில்லிமீட்டர், அடுத்த நாள் 911 மில்லிமீட்டர் பெய்தது. இது கிளவுட்பர்ஸ்ட் மழை இல்லை. பருவகாலத்தில் பெய்யும் மழையில் அதிகபட்ச மழைப்பொழிவு ஏற்பட்டது என்று சொல்லலாம்.
கே: நீலகிரி போல இந்த ஆண்டில் இந்தியாவில் பிற பகுதிகளில் அதிக கனமழை பெய்த இடங்கள் உள்ளனவா? இந்தியாவில் இந்த ஆண்டு வேறு எங்கும் கிளவுட் பர்ஸ்ட் மழை பெய்ததா?
ப: ஒரு மாதத்திற்கு முன்னர், குஜராத் பரோடா பகுதியில் ஒரு நாளில் வெறும் மூன்று மணிநேரத்தில் 587மில்லிமீட்டர் மழை பெய்தது. மும்பை மற்றும் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியான குடகு பகுதியில் பெய்த மழையால், வெறும் மூன்று நாட்களில் அணைகளில் நீரின் அளவு அதிகரித்தது.
அதேபோல கொல்கத்தா, அசாம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த ஆண்டு அதிக கனமழை பதிவானது. சென்னை போன்ற இடங்களில் 200 மில்லிமீட்டர் பெய்தால் கனமழை என நினைப்போம். இங்கு மழை நீர் வெளியேற இடங்கள் குறைவாக இருப்பதால் தண்ணீர் தேங்குவதால் நமக்கு அவ்வாறு தெரிகிறது.
ஒவ்வொரு பகுதியில் உள்ள நிலபயன்பாடு வித்தியாசமாக உள்ளது. அதனால் நமக்கு கனமழை பெய்தது போல தெரியும். ஆனால் கிளவுட் பர்ஸ்ட் மழை பதிவாகவில்லை.
கே: வேலூர் மாவட்டத்தில் 100 ஆண்டுகளாக இல்லாத அளவு கனமழை பெய்தது என்று சொல்லப்பட்டது. வேலூர் மாவட்ட மழை குறித்து சொல்லுங்கள். பருவநிலை மாற்றத்திற்கும் இதுபோன்ற கனமழைக்கு தொடர்பு உள்ளதா?
ப: வேலூரில் பெய்த மழை வெப்பச்சலனம் காரணமாக பெய்த மழைதான். ஆகஸ்ட் 1909ல் வேலூரில் 109 மில்லிமீட்டர் மழை பெய்தது. சுமார் 110 ஆண்டுகளுக்கு பின்னர் 167 மில்லிமீட்டர் கனமழையை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது. அதிலும் வெறும் மூன்று மணிநேரத்தில் 90 சதவீத மழை பெய்துவிட்டது.
வேலூர் மாவட்டத்திற்கு 100 ஆண்டுகளாக பெய்த மழையின் அளவு குறித்த பதிவுகள் இருப்பதால், நமக்கு கனமழை பற்றி தெரியவந்துள்ளது. பிற பகுதிகளிலும் கூட,கனமழை சம்பவங்கள் நடந்திருக்கும். வேலூரை அடுத்துள்ள கலசப்பாக்கம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் அதேநாள் சுமார் 200 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும்போது, அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி மற்றும் நீலகிரி போன்ற இடங்களில் ஒரு நாளில் கனமழை பெய்யும். கடந்த இரண்டு மாத காலமாக அவலாஞ்சி பகுதியை தனியாக குறிப்பிட்டு, மழை பதிவை வானிலை ஆய்வு மையம் வெளியிடுகிறது. இதுபோன்ற பதிவுகள் தெரியவருவதால், அதை கிளவுட் பர்ஸ்ட் மழையாக இருக்குமோ என்ற தோன்றுகிறது.
கே: உங்கள் சமீபத்திய ட்விட்டர் பதிவில் சென்னையில் பெய்த மழையால் நீர்நிலைகளில் மாற்றம் இருக்காது என பதிவு செய்துள்ளீர்கள். விளக்கமாக சொல்லுங்கள்.
சென்னையில் பெய்த மழையால் உடனடியாக நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கம் இருக்காது. ஆனால் மழை நீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தியுள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். ஐந்து நாட்கள் பெய்த மழையால் நமக்கு நீர்நிலைகளில் தேங்கும் அளவு மழை கிடைக்கவில்லை.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்த்தேக்கம் அதிகரிக்கவில்லை. நீர் பிடிப்பு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை கனமழையாக பெய்ததால், நீர் பெருக்கெடுத்து ஏரிகளில் நிரம்பாது.
ஆனால் மே மற்றும் ஜூன் மாதம் இருந்ததைவிட, நிலத்தடி நீர் உயர்வதற்குத் தேவையான மழை சென்னையில் பெய்தது. வெறும் 500 சதுரடி கொண்ட வீட்டில் 50 மில்லிமீட்டர் பெய்த நாளில் மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தால், சுமார் 50,000 லிட்டர் நீர் சேகரிக்கப்பட்டிருக்கும். மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை இந்த மழை நமக்கு உணர்த்தியுள்ளது.
கே: தமிழகத்தில் உள்ள அணைகளில் உள்ள நீரின் அளவுகளை குறிப்பிட்டு அவ்வப்போது ட்விட்டர் பதிவு செய்கிறீர்கள். இந்த புள்ளிவிவர பதிவுகள் எந்தவிதத்தில் மக்களுக்கு உதவுகின்றன?
ப: நான் என் சொந்த ஆர்வத்தில் மழை பற்றிய விவரங்களை தொகுத்து வெளியிட்டேன். பல விவசாயிகள் அந்த பதிவு உதவுவதாக தெரிவித்தார்கள். அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்கள் வயலுக்கான நீர் திறந்துவிடப்படுமா என என் பதிவின் மூலம் தெரிந்துகொள்வதாக சொல்கிறார்கள்.
சில விவசாயிகள் அவர்களாகவே எங்கள் ஊரில் மழை பதிவை வைத்து, டேம் அளவு என்னவாக உள்ளது என சொல்லுங்கள் என கேட்பார்கள். என் சொந்த விருப்பத்திற்காக தொடங்கிய ஒரு பதிவு பலருக்கும் உதவுகிறது என்பதில் மகிழ்ச்சி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்