You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த இலங்கை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறப்பு
ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் முழுமையாக சேதமடைந்த கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் தலைமையில் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இந்த குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முழுமையாக சேதமடைந்திருந்தது.
தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் மூன்று தினங்கள் முழுமையாக விசாரணைகளுக்காக மூடப்பட்டிருந்த தேவாலயம், பின்னர் தேவாலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்றிருந்தனர்.
இதன்படி, புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புக்கள், கடந்த ஒன்றரை மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு, தேவாலயம் இன்று தேவாலயத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, வத்திக்கான் பேராயர், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வருகைத் தந்து விடயங்களை ஆராய்ந்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, புனித அந்தோனியார் தேவாலயம் இன்று கடற்படையினரால் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டு, பின்னர் இன்று மாலை விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் தலைமையில் இந்த திருப்பலி ஒப்புக் கொடுத்தல் நடைபெற்றிருந்தது.
இந்த நிலையில், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு வருகைத் தரும் அனைத்து பக்தர்கள், முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தேவாலயத்திற்குள் உள்வாங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்