You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை முஸ்லிம்கள் நாட்டைவிட்டே வெளியேற விரும்புகிறார்களா - உண்மை நிலவரம் என்ன?
இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வெளிவிவகார அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் சரோஜா சிறிசேனவிடம் வினவியபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் காணப்படுகின்ற அச்ச நிலைமை காரணமாக இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து இதுவரை வெளிவிவகார அமைச்சகத்துக்கு எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஹிஸ்புல்லாவின் பதில்
முஸ்லிம்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டே தாம் காத்தான்குடியில் இந்த கருத்தை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதை விடுத்து, தான் வேறு எந்தவழியிலும் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கூறினார்.
'கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை'
முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற எந்தவொரு கலந்துரையாடலிலும், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறும் விடயம் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவிக்கின்றது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உறுப்பினர் ஒருவர் இந்த விடயத்தை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், முஸ்லிம்களின் கைது விடயங்கள், முஸ்லிம்களின் பாதுகாப்பு உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக கூறிய அவர், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறும் விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதன்படி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உண்மைக்கு புறம்பான சில கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
'எவரும் வெளிநாட்டு தூதரகங்களை நாடவில்லை'
தான் கலந்துக்கொண்ட எந்தவொரு இடத்திலும் இந்த விடயம் கலந்துரையாடப்படவில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.
ஹிஸ்புல்லா வெளியிட்ட கருத்து தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வழமையான நடவடிக்கைகளுக்காகவே முஸ்லிம்கள் வெளிநாடுகளை நோக்கி செல்வதாக கூறிய அசாத் சாலி, நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும் எண்ணத்துடன் எவரும் வெளிநாட்டு தூதரகங்களை நாடவில்லை எனவும் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவிடம் நாளை விசாரணை
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலைக்கு, அவர் நாளை (13.6.19) அழைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பெட்டிக்லோ கெம்பஸ் பிரைவட் லிமிட்டட், கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாவின் குடும்பத்தாரின் பெயர் வைக்க முயற்சித்த நடவடிக்கை, பயங்கரவாதத் தாக்குதல், சாஹரானுடனான தொடர்புகள், கிழக்கு மாகாணத்தில் அரபு மொழி பாவனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நாளை விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 7000 முஸ்லிம் குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேற எத்தணிக்கும் விடயம் தொடர்பிலும் நாளைய தினம் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்