இலங்கை குண்டுவெடிப்பு: 9 நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைDANIEL LEAL-OLIVAS/AFP/GETTY IM

சமூக வலைத்தளங்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கடந்த 21ஆம்தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது, டுவிட்டர் தவிர்ந்த ஏனைய முக்கிய பல சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்திருந்தது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரேம், வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இனவாத கருத்துக்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பகிர்வதனை தடுத்து, நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், 9 நாட்களின் பின்னர் சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

சமூக வலைத்தளங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் காணப்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமையை கருத்தில் கொண்டு, மக்கள் மிகவும் பொறுப்புடன் அதனை பயன்படுத்துமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, கண்டி - திகண பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது, அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் முதல் முறையாக இலங்கையில் மூடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :