நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் தேர்தல் ஆணையம் விசாரணை

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம், Twitter

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே வாக்களித்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டியில், "வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம்.

அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.

தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.

அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.

விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப் பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை." என்று கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தமிழகத்தில் தீண்டாமை'

தமிழகத்தில் தீண்டாமையானது 646 கிராமங்களில் தொடர்வதாக சமூக விழிப்புணர்வு மன்றம் பெற்ற ஆர்.டி.ஐ தகவலை மேற்கொள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

கோயமுத்தூர், ராமநாதபுரம், விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தருமபுரி, சேலம், நீலகரி, புதுக்கோட்டை, விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தேனி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தீண்டாமை நிலவுவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

Presentational grey line
Presentational grey line

இந்து தமிழ்: 'சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் போராட்டம்'

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் போராட்டம்

பட மூலாதாரம், CMRL

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 8 பேர் பணிநீக்கத்தை கண்டித்து கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர் கள் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரயில்கள் இயக்கப்படுவது குறைந்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் செய்தி பின் வருமாறு விவரிக்கிறது:

"சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 2 டிராஃபிக் கன்ட்ரோலர், 3 தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள், ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர் இருவர் என 8 பேரை நிர்வாக காரணங்களுக்காக பணிநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டது.

இதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று திடீரென அனைத்து ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், 240-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், மாலை 6 மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடர்வதில் குழப்பம் நிலவியது. மாலை 6.30 மணிக்கு பிறகு, சென்னை சென்ட்ரல் இருந்து விமான நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டைக்குச் செல்ல வேண்டிய மெட்ரோ ரயில்கள் உடனுக்குடன் இயக்காமல் 30 நிமிடங்களுக்கு ஒரு சேவை மட்டுமே இயக்கப்பட்டது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறும்போது, ''ஊழியர்களின் போராட்டத்தால் மெட்ரோ ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டதால் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், மீண்டும் பணி கோரி நிர்வாக இயக்குநரிடம் மேல் முறையீடு செய்தால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

இதனிடையே ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, ''2013, 2015-ல் 250 பேர் பல்வேறு பிரிவுகளுக்கு நிரந்தர ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டோம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து எங்களுக்கு வழங்க வேண்டிய படியை 30 சதவீதம் குறைத்தனர். இதையடுத்து, நாங்கள் தொழிற்சங்கத்தை தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாகவே பணி நீக்கம் செய்துள்ளனர்'' என்றனர்.

Presentational grey line
கருணாநிதி

பட மூலாதாரம், இந்து தமிழ்

Presentational grey line

தினமணி: 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.2% தேர்ச்சி'

’பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.2% தேர்ச்சி'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.2 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வைப் போன்றே இந்தத் தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

தமிழகம், புதுச்சேரியில் பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 76,019 பேர் எழுதினர். இவர்களில் பள்ளிகளில் படித்த மாணவியர் 4 லட்சத்து 68,570 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 69 ஆயிரத்து 289 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.

பொதுத்தேர்வு முடிவுகள் www.dge1.tn.nic.in, www.dge.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் 95.2 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் (94.5) தேர்ச்சி சதவீதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய 4,816 மாற்றுத் திறனாளிகளில் 4,395 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று 143 சிறைவாசிகளில் 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாட வாரியான தேர்ச்சியில் அதிகபட்சமாக அறிவியலில் 98.56 சதவீதத்தினர் தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் (98.53) முதலிடத்தையும், ராமநாதபுரம் (98.48) இரண்டாமிடத்தையும், நாமக்கல் (98.45) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. 89.98 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :