இலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடா செல்ல அனுமதியா? #BBCFactCheck

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்,
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கையை சேர்ந்த மக்கள் எவ்வித விசாவுமின்றி கனடா வரலாம் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு போலிச் செய்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இலங்கையில் போலிச் செய்திகளின் பரவலை தடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் இதுவரை அந்நாடு முழுவதும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், "இலங்கையர்கள் விசா இல்லாமல் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு" மற்றும் "இலங்கையர்கள் விசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி; ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி" என்ற தலைப்புகளுடன் கூடிய செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
"கனடாவின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் இலங்கையின் பங்களிப்பு காத்திரமானதாக அமைந்துள்ளது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்" என்றும், "கனடாவின் அபிவிருத்தியில், இலங்கைச் சகோதர சகோதரிகளின் பங்களிப்பினை மலினப்படுத்திவிட முடியாது" என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாகவும் அந்த செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கனடாவிற்கு வரும் இலங்கையர்களுக்கு அங்கு பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்காணும் செய்திகள் தமிழ் மொழிலேயே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதே போன்றதொரு செய்தியை ஆங்கில இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 2
வைரலாக பரவி வரும் இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தபோது, இது போலியானது என்று தெரியவந்துள்ளது.
செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
இலங்கை மக்கள் கனடாவுக்குள் விசா இன்றி செல்லலாம் என்ற செய்தி பரப்பப்படுவது தொடர்பாக கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
"உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கான விசாக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் கனடிய அரசு நீக்கிவிட்டதென்ற கருத்தை ஏற்படுத்தும், இலங்கையில் உருவாக்கப்பட்ட தவறான தகவல்கள், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகின்றன. இத்தகைய விசா விலக்களிப்பு நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லையென்பதைத் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்" என்று கேரி ஊடகங்களுக்கு அளித்துள்ள விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"இலங்கை நிலைமை குறித்துக் கனடிய அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் இந்தவேளையில், இலங்கைக் குடிமக்களுக்கான விசாக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கனடாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிடுவோர் யாராக இருந்தாலும், பொருத்தமான விசாக்களுக்கு விண்ணப்பித்து, வழமையான அனைத்து நிபந்தனைகளையும் திருப்தி செய்யவேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களும், கனடாவுக்குப் பயணம் செய்ய விரும்பும் ஏனையோரும் தவறான தகவல்களால் மேலும் பாதிக்கப்படாதிருப்பது முக்கியமானது என்றும் கனடிய அரசு விசா நடைமுறைகளில் ஏதாவது மாற்றங்களைச் செய்தாலோ, அல்லது சிறப்பு விலக்களிப்புக்களை வழங்கினாலோ, எனது அலுவலகம் உடனடியாக இந்த விவரத்தை வெளியிடும் என்றும் கேரி ஆனந்தசங்கரி இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இலங்கை மற்றும் மாலத்தீவுக்கான கனடாவின் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"இலங்கையர்களுக்கு கனடாவுக்கு "விசா அற்ற" அனுமதி என்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. விசா நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை" என்று அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












