You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக வடமாகாணத்தில் கறுப்புக் கொடி
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. எனினும் வடக்கு மாகாணத்தில் இன்றைய நாளினை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் கவன ஈர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் . ''எமக்கு எப்போது சுதந்திர தினம்''? எனக் குறிப்பிட்டுள்ள பதாதகையும் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் கம்பத்தில் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த சுதந்திர தினம் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி உள்ளது.
"இலங்கை காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையிலும் உள்நாட்டு யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்லை, தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றன. தொல்பொருள் திணைக்கள ஆய்வு என்ற வகையில் வணக்கஸ்தலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றதன புலிகள் மீளுருவாக்கம் என்ற போர்வையில் அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகின்ற அவலம் தொடர்கிறது" என மாணவர் ஒன்றியும் புகார் கூறியுள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யபட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டுவருகின்ற நிலையில் யாருக்கு சுதந்திரம் கிடைத்தது என்கிற கேள்வியே எல்லாவற்றையும் முந்திக்கொண்டு கேள்விக்குறியாய் எம்முன்னே எழுந்து நிற்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு நாற்பது வருடங்கள் கடந்துபோன இன்றைய நிலையிலும் அந்த சட்டம் யுத்தம் முடிந்தும் நீக்கப்படாமல் அமுலில் இருப்பதானது காலங்காலமாக தமிழரை அடக்கி ஒடுக்கி அடிமையாக்கப்பட்ட இனமாக வைத்திருக்க விரும்புவதன் வெளிப்பாடே ஆகும். இலங்கை சுதந்திரம் அடைந்த நாள்தொட்டு இலங்கையில் நடந்த கலவரங்கள் தமிழர்களை இனவழிப்பு செய்யும் கலவரங்களாகவே நடந்துள்ளன.
இந்த இனவழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனவழிப்பு யுத்தம் இலங்கையின் சிறுபான்மை இனங்களில் முதன்மையாக இருந்த நாம் இன்று மூன்றாம் நிலையை நோக்கி பின்தள்ளப்படுமளவுக்கு எமது உறவுகள் அழிக்கப்பட்டு உள்ளார்கள் என்று மாணவர் ஒன்றியம் புகார் கூறியுள்ளது.
இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வாறான சட்டதிருத்தங்கள் நடந்தாலும் அது ஒற்றையாட்சி கட்டமைப்பினையும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் வகையிலேதான் அமையும் என்பதனை வரலாறு தெளிவாக எமக்கு கற்றுத்தந்துள்ளது." என்கிறது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.
கொழும்பில் சுதந்திர தினம்
இந் நிலையில், இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு - காலி முகத்திடலில் இன்று முற்பகல் நடைபெற்றது.
சுதந்திர தின நிகழ்வுகளுக்காக இராணுவ அணிவகுப்புடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காலி முகத்திடலுக்கு அழைத்து வரப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுதந்திர தின நிகழ்வின் பிரதம அதிதியாக மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி மற்றும் அவரது பாரியார் ஆகியோர் பங்கேற்றிருந்தார்.
தேசிய அரசாங்கத்துக்கு ஜனாதிபதி எதிர்ப்பு
இதேவேளை, உத்தேச தேசிய அரசாங்க யோசனைக்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட வகையிலான ஓர் உறுப்பினரை அடிப்டையாகக் கொண்டு, உத்தேச தேசிய அரசாங்க யோசனைக்கு தான் முழுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே இந்த தேசிய அரசாங்க யோசனை முன்வைக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள செயற்பாடானது, ஜனநாயகத்திற்கு சவாலை தோற்றுவித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
எனினும், இந்த விடயங்கள் குறித்து அரசு சார்பற்ற நிறுவனங்கள் இன்று எந்தவித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை என அவர் கவலை வெளியிட்டார்.
மூன்று தசாப்த யுத்தம் நிறைவு பெற்று, ஒரு தசாப்தம் அடைந்துள்ள போதிலும், தேசிய பிரச்சினையை நிறைவுக்கு கொண்டு வர முடியாமை கவலையளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :