கொல்கத்தாவில் மம்தா தர்ணா: சமூக ஊடகத்தில் உரக்க ஒலிக்கும் தமிழகத்தின் பெயர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள அவர், நாட்டை காப்பாற்றும் வரை தனது தர்ணா தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு ஆதரவாக மாநில தலைவர்கள் பகிர்ந்துள்ள ட்வீட்டுகளில் இந்த மாநிலத்தின் கூட்டாட்சி தத்துவம் காக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த சூழலில், சமூக ஊடகங்களில் ராஜமன்னார் கமிட்டி குறித்து பலர் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

மம்தா தர்ணாவிற்கும் ராஜமன்னார் கமிட்டிக்கும் என்ன தொடர்பு? மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் இருக்கும் இந்த தருணத்தில் ராஜமனார் கமிட்டி குறித்து எழுத, அது குறித்த தகவல்களை பகிர என்ன காரணம்?

'ராஜமன்னார் கமிட்டி'

ராஜமன்னார் கமிட்டி 1969ஆம் ஆண்டு கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒன்று.

இந்த கமிட்டியானது மத்திய மாநில அரசுகளின் அதிகார பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டது.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969ஆம் ஆண்டு1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது.

அக்குழுவின் அறிக்கை மத்திய-மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் முக்கிய சாசனமாக கருதப்பட்டது.

மத்திய - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கியக் காரணம்

மாநில உரிமைகள்

ராஜமன்னார் குழுவின் அறிக்கை தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை அனுப்பினார். ஐதராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து என்.டி.ராமாராவ் மாநாடு நடத்தினார். அதுபோல, ஷிலாங்கில் அசாம் கண பரிஷத் மாநாடு நடத்தியது.

சரி, மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதற்கும் ராஜமன்னார் குழுவுக்கும் என்ன தொடர்பு?

பலர் மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதாகவும், மத்திய அரசு ஏதேச்சதிகாரத்துடன் மாநிலங்களை அணுகுவதாகவும் நினைக்கிறார்கள்.

மம்தாவும் இதனை பிரதானமாக கூறியே இந்த தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

அதனால் இதன் பொருட்டே இவ்வாறான பதிவுகளை பகிர்கின்றனர்.

எதிர்ப்பு

இதனையெல்லாம் கடந்து மம்தாவிற்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை.

இது ஊழல் வழக்கு. அதனை சி.பி.ஐ விசாரிக்கிறது. இதில் எங்கிருந்து மாநில உரிமைகள் என்ற பேச்செல்லாம் வந்தன என்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை.

அவர் சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறார்கள் சில சமூக ஊடக பதிவர்கள்.

மம்தா கர்வத்துடன் செயல்படுவதாக சிலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :