You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை வடக்கு மாகாணத்தில் வெள்ளம்: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்வு
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் 2,788 குடும்பங்களை சேர்ந்த 9,161 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
மேலும், 1,829 குடும்பங்களை சேர்ந்த 5,775 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் முதல் பெய்துவரும் அடை மழையினால் இலங்கையின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனினும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பெரியளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிளிநொச்சியின் பிரதான குளமான இரணைமடுவின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டமையால் தர்மபுரம், பரந்தன், கண்டாவளை, முரசுமோட்டை, வட்டக்கச்சி, நாகேந்திரபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு நகர்த்தும் மீட்பு பணியில் பொலிசார், கடற்படையினர், இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் வவுனிக்குளம், முத்தையன்கட்டுக்குளம், தண்ணி முறிப்பு, உடையார்கட்டுகுளம், விசுவமடுகுளம் வான் பாய்கின்றது.
கிளிநொச்சியில் இரணைமடுக்குளம், கல்மடு குளம் வான்பாய்கின்றது. வெள்ளத்தினால் பிரதான வீதிகள் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் வடக்கு மாகாணத்தில் 40 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,414 குடும்பங்களைச் சேர்ந்த 4,443 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 1,347 குடும்பங்களைச் சேர்ந்த 4,633 பேரும், வவுனியா மாவட்டத்தில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேரும், யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணியில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 708 பேரும், மன்னார் மாவட்டத்தில் செல்வேரி, வங்காலை பிரதேசங்களை சேர்ந்த 28 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்