You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசியல் குழப்பம்: 'அரசில் இணைய முடியாது' - சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த வரிசையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள 6 எம்.பிக்கள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர், ட்விட்டர் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,''நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து, அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாகக் கூறி விட்டோம்.'' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்துவரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதிய பிரதமருக்கு ஆதரவளிக்கவிருப்பதாக வெளியாகும் செய்திகளை அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார்.
புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அவருடைய நியமனம் ஜனநாயகக் கொள்கைகளுக்கு விரோதமானது என தாம் நினைவில் கொண்டுள்ளதாக, ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை தற்போது கொழும்பு அரசியலில் நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.
இன்று புதன்கிழமை காலை அலரி மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, காந்திய கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் நாடாளுமன்றத்தைக் கூட்ட அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்த எட்டு எம்.பிக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க அணி மாறியுள்ளனர். இதற்கு மேலதிகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருவரும் மகிந்த தரப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்த ஒரு எம்.பி. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க அணி மாறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரத்தைக் கைப்பற்ற இரண்டு வழிகள் இருப்பதாக மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். ஒன்று பலாத்காரம், இரண்டாவது நம்பிக்கையைப் பெற்று ஜனநாயக முறை. காந்தி எப்போதும் ஜனநாயகவாதி என்பதால், காந்திய கொள்கைகளைப் பின்பற்றுவோர் நாடாளுமன்றத்தைக் கூட்ட வலியுறுத்த வேண்டும். நாடாளுமன்றததில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை எமக்கு இருப்பதால், நாடாளுமன்றத்தைக் கூட்டக் கோருகிறோம்.'' என்று கூறினார்.
எனினும், இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல பணிகள் மீதமிருப்பதால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி 14ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், 116 பேர் கையெழுத்திட்டு கடிதமொன்றைக் கையளித்துள்ளதால், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னைய நிலையையே தான் ஏற்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதமர் ஆசனம் உள்ளிட்ட உறுப்பினர்களின் ஆசன ஒதுக்கீடு குறித்து சபாநாயகர் இன்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆசனம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வியும், இழுபறி நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கப் பேச்சாளர் கெஹெலெிய ரம்புக்வெல்ல பிபிசி தமிழிடம் பேசினார்.
இதற்குப் பதிலளித்த அவர், ''வெளியில் இருந்து பார்க்கத்தான் இப்படி இருக்கிறது. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதை உணரவேண்டும். அரசியலில் நெருக்கடி ஏற்படும் போது இரகசியம் பேணுவது தவறு இல்லை. எனினும், அந்த ரகசியம் எதிர்காலத்தில் நம்பிக்கையாக மாற வேண்டும்.'' என்று பதிலளித்தார்.
மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு உத்தியோகபூர்வமாக 104 பேர் மட்டுமே உள்ளது. நாடாளுமன்றம் கூட்டப்படும் போது 113 என்ற பெரும்பான்மையைக் காண்பிக்க முடியுமா என்று அரசாங்கம் பேச்சாளர் கெஹெலெிய ரம்பக்வெல்லவிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அரசாங்க பேச்சாளர், ''104 என்பது கண்ணுக்குத் தெரிந்த எண்ணிக்கை மட்டுமே. அப்படிப் பார்க்கும்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதைவிடக் குறைவாகவே இருக்கிறது. ஒப்பீட்டு ரீதியாக எமக்கே அதிக ஆதரவு இருக்கிறது. 113 ஆதரவைப் பெறுவது குறித்து நாட்டிற்குத் தெரியப்படுத்த தேவையில்லை.'' என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: