You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தன்னைத் தானே அழித்து கொள்ளும் மனித இனம்: எச்சரித்த ஸ்டீஃபன் ஹாக்கிங்
மனித இனம் தானே உருவாக்கிய தொடர்ச்சியான ஆபத்துக்களால் அழிவை சந்திக்கலாம் என்று சில ஆண்டுகளுக்குமுன் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்திருந்தார்.
அணு ஆயுதப்போர், புவி வெப்பமாதல் மற்றும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை அவர் குறிப்பான ஆபத்துக்களாக சுட்டிக்காட்டினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்படக்கூடிய எதிர்கால முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் தவறாகப் போவதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2016 ஆண்டுக்கான பிபிசியின் ரீத் உரை நிகழ்த்தும்போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அண்டவெளியின் black holes பற்றிய விரிவான ஆய்வுகள் குறித்து அவர் உரை நிகழ்த்தினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மனித இனம் எதிர்காலத்தில் வேறு உலகங்களில் சென்று குடியேற்றங்களை அமைப்பது சாத்தியமானால் அழிவில் இருந்து தப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
"குறிப்பிட்ட ஒரு ஆண்டில் உலகம் ஒரு பேரழிவில் சிக்கி அழிந்துவிடும் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவானதுதான் என்றாலும், காலம் செல்லச் செல்ல, ஆண்டுகள் கூடக்கூட அதற்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கும். அடுத்த ஆயிரம் ஆண்டுகள் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி நடப்பதற்கான சாத்தியம் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகிவிடும்", என்றார் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
"அப்படி நடப்பதற்கு முன்னர் மனிதர்கள் அண்டவெளியின் மற்ற இடங்களுக்கு, கோள்களுக்கு அல்லது நட்சத்திரங்களுக்கு பரவி வாழப்பழகியிருக்க வேண்டும். அப்படி நடந்தால் நாம் தற்போது வாழும் இந்த உலகத்துக்கு அழிவு ஏற்பட்டால் மனித இனமே அழிந்துவிடும் என்கிற நிலைமை உருவாகாது", என்றார் அவர்.
"அதேசமயம், பூமிக்கு வெளியே அண்டவெளியில் தன்னிறைவு பெற்ற தனி உலகமாக மனிதர்கள் குடியேறி வாழ்வது என்பது குறைந்தது அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை. அது நம்மால் முடியும் என்று தோன்றவில்லை. எனவே அடுத்த நூறாண்டு காலகட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்", என்று அவர் யோசனை தெரிவித்தார்.
அறிவியல்துறையின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அறிவியல் துறையின் முன்னேற்றங்களே மனித இனத்துக்கான புதிய ஆபத்துக்களை உருவாக்கக்கூடும் என்று கூறுவது சுயமுரணாக சிலரால் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பே கூட Artificial intelligence (AI) என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் இயந்திர அறிவு மிகப்பெரிய அளவில் முன்னேற்றமடைந்து மனித இனத்தையே எதிர்காலத்தில் அழிக்கக்கூடும் என்றும் ஹாக்கிங் எச்சரித்திருந்தார்.
அதேசமயம் அதை எதிர்கொள்வதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
"அறிவியல் துறையில் நாம் முன்னேற்றங்களை நிறுத்தப் போவதில்லை. அறிவியலில் நாம் பின்னோக்கியும் செல்லப்போவதில்லை. எதிர்கால ஆபத்துக்களை இனம் கண்டு அதை கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு நம்பிக்கையாளன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நம்மால் அதை செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்", என்றார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.
இளம் விஞ்ஞானிகளுக்கு என்ன ஆலோசனைகள் சொல்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, நாம் வாழும் பேரண்டம் "பரந்துபட்டது, சிக்கலானது என்பதை உணரும் பேராச்சரிய மனோநிலையை" அவர்கள் தொடர்ந்து தம்முள் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார்.
"என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை சொல்வதானால், உயிரோடு இருப்பதும் கோட்பாட்டுரீதியான இயற்பியல் துறையில் ஆய்வுகள் செய்வதும் என் வாழ்வின் உன்னதமான காலம் என்றே சொல்வேன். முன்பு யாருமே கண்டிராத ஒரு விஷயத்தை நாம் முதல்முறையாகக் கண்டுபிடிக்கும் அந்த அற்புதத் தருணத்தைப் போல வேறொரு தருணத்தை ஒப்பிட்டு சொல்லவே முடியாது. அப்படியானதொரு அற்புதத் தருணம் அது", என்றார் பேராசிரியர் ஹாக்கிங்.
அதேசமயம், எதிர்கால ஆய்வாளர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றங்கள் உலகை எப்படி மாற்றியமைக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருப்பது அவசியம் என்றும், பொதுமக்கள் அதை புரிந்துகொள்ள அவர்கள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்