சில நாள்களில் 20 லட்சம் முறை பார்க்கப்பட்ட ஹாக்கிங்கின் பி.எச்டி. ஆய்வேடு

புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 1966-ம் ஆண்டு செய்த பி.எச்டி. ஆய்வேடு, இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்ட சில நாள்களில் சுமார் 20 லட்சம் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

'விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு 133 பக்கம் கொண்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டிரினிடி ஹால் கல்லூரியில் தமது 24-வது வயதில் இந்த ஆய்வினைச் செய்தார் ஹாக்கிங்.

இதுவரை கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த இந்த ஆய்வேட்டினை, கடந்த அக்டோபர் மாதம் முதல் இலவசமாகப் படிக்கும் வகையில் தங்கள் இணைய தளத்தில் வெளியிட்டது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.

செயலிழந்த இணைய தளம்

உடனே கேம்பிரிட்ஜ் தளத்தினை பெருமளவில் மொய்க்கத் தொடங்கினார்கள் இயற்பியல் ஆர்வலர்கள். அதிகம் பேர் இந்த ஆய்வேட்டினை ஒரே நேரத்தில் படிக்க வந்த காரணத்தால் கேம்பிரிட்ஜ் இணைய தளமே திணறி செயலிழக்கும் நிலைக்குப் போனது.

இந்த ஆய்வு இலவசமாக வெளியான சில நாள்களில் உலகம் முழுவதிலும் இருந்து 8 லட்சம் பேர் மொத்தம் 20 லட்சம் முறை இந்த ஆய்வேட்டை இணையத்தில் புரட்டிப் பார்த்துள்ளனர். இது தவிர, 5 லட்சம் பேர் இதைத் தரவிறக்கம் செய்ய முயற்சித்துள்ளனர்.

"எங்கள் பல்கலைக்கழகத்தின் 'அப்பல்லோ தொகுப்பில்' உள்ள கட்டுரைகளிலேயே அதிகம் படிக்கப்பட்டது இந்த ஆய்வேடுதான்," என்று கூறியுள்ளார் இப்பல்கலைக்கழகத்தின் அறிவுசார் தகவல் தொடர்புத் துறைக்கான துணைத் தலைவர் டாக்டர் ஸ்மித்.

எந்த ஆய்வுத் தொகுப்பிலும் அதிகம் படிக்கப்பட்டது இந்த ஆய்வுதான் என்று கணிப்பதாகவும், இதைப் போன்ற எண்ணிக்கையில் ஆய்வேடு ஒன்று படிக்கப்பட்டதை எப்போதும் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, அதிகம் படிக்கப்பட்ட பி.எச்டி. ஆய்வேடுகள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள கட்டுரை, வெறும் 7,960 முறைதான் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இலவசம் என அறிவிக்கப்படும் முன்பு இந்த ஆய்வேட்டைப் படிக்கவோ, ஸ்கேன் செய்துகொள்ளவோ 65 பவுண்டு பணம் செலுத்தவேண்டும். தற்போது ஹாக்கிங் தமது ஆய்வை படிப்பதை இலவசமாக்கியுள்ளதைப் போல கேம்பிரிட்ஜின் மற்ற முன்னாள் கல்வியாளர்களும் தங்கள் ஆய்வை இலவசமாகத் தருவதை ஊக்குவிக்க முடியும் என கேம்பிரிட்ஜ் நம்புகிறது.

"அறிவைப் பூட்டி வைப்பதால் யாருக்கும் பயனில்லை," என்று கூறியுள்ளார் டாக்டர் ஸ்மித்.

யார் இந்த ஸ்டீபன் ஹாக்கிங்

1942 ஜனவரி 8-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். 1959ல் இயற்கை அறிவியல் படிக்க இவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜில் பட்டமேற்படிப்பு சேர்ந்தார்.

படிப்படியாக உடல் இயக்கத்தை முடக்கும் 'மோட்டார் நியூரோன் நோய்' எனப்படும் அரிய நோய் இவருக்கு இருப்பது 1963ல் கண்டுபிடிக்கப்பட்டது. அது முதல் படிப்படியாக இவரது உடல் இயக்கம் முடங்கிவந்தது. இப்போது ஏறத்தாழ இவரது மொத்த உடலும் முடங்கிப் போயுள்ளது.

1974-ம் ஆண்டு விண்வெளியில் உள்ள கருந்துளைகள் கதிரியக்கத்தை வெளியிடுவதைப் பற்றிய ஒரு கோட்பாட்டை வெளியிட்டார் இவர்.

1988ம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட 'ஏ பிரிஃப் ஹிஸ்ட்ரி ஆஃப் டைம்' (காலம் பற்றிய சுருக்கமான வரலாறு) என்ற நூல் 1 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

இவரது வாழ்க்கை 'எல்லாவற்றையும் பற்றிய கோட்பாடு' (த தியரி ஆஃப் எவரிதிங்) என்ற பெயரில் 2014ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :