தமிழ் பள்ளி அதிபரை காலில் விழவைத்த மாகாண முதல்வர்: நாடாளுமன்ற குழு விசாரணை

ஊவா மாகாண முதலமைச்சரால் முழந்தாளிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறப்படும் பதுளை மகளிர் தமிழ் வித்தியாலய அதிபரின் கைபேசி தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்க இந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழுத் தீர்மானித்துள்ளது.

கையடக்கத் தொலைபேசி தொடர்பான அறிக்கைகளை பெற்று விசாரணைகள் நடத்தப்படும் பட்சத்தில், இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பிலான தகவல்களை இலகுவில் திரட்டிக் கொள்ள முடியும் என அந்த குழுவை தலைமை தாங்கும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸநாயக்கவினால் தமிழ் பாடசாலையொன்றின் அதிபர் முழந்தாளிட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற கல்வி கண்காணிப்பு குழு நேற்று (23) நாடாளுமன்றத்தில் கூடியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் கூடிய இந்த கலந்துரையாடலுக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சு மற்றும் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

பதுளை மகளிர் தமிழ் வித்தியாலயத்திற்கு தரம் ஒன்றுக்கு மாணவியொருவரை இணைத்துக் கொள்வதற்காக ஊவா மாகாண கல்வி அமைச்சராக செயற்படும் முதலமைச்சரினால் சிபாரி்சு செய்யப்பட்ட ஒருவர் அதிபரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் முதலமைச்சர் கல்வி அதிகாரிகளுடன் அதிபரை தனது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு அழைத்து கலந்துரையாடியுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், முதலமைச்சர் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமையிால், அதிபர் முதலமைச்சரின் முன்னிலையில் முழந்தாழிட நிர்ப்பந்திக்கப்பபட்டதாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் நாம் அதிபரை தொடர்புக் கொண்டு வினவிய போது, முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் நடந்துக் கொண்ட விதத்தினால் தான் முழந்தாழிட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த சம்பவம் கடந்த இரண்டாம் திகதி இடம்பெற்றிருந்த போதிலும், குறித்த அதிபர் கடந்த 19ஆம் திகதியே சம்பவம் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல்கள் காரணமாக சம்பவம் தொடர்பான உண்மை நிலைமையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு தான் தள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸநாயக்க வசம் காணப்பட்ட கல்வி அமைச்சு பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

ஊவா மாகாண கல்வி அமைச்சு, தற்போது மாகாண ஆளுநர் வசமாகியுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி, உரிய விசாரணைகளை நடாத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தஸநாயக்க தனது சட்டத்தரணியுடன் பதுளை பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட முதலமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராயும் நோக்குடன் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாடாளுமன்ற கல்வி கண்காணிப்பு குழு, அதன் தலைவர் வடிவேல் சுரேஷ் தலைமையில் நேற்று (23) கூடியது.

இதன்போது சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை நடத்தும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன், கல்வி அமைச்சின் இரண்டு மேலதிக செயலாளர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், அவேசமடைந்த அமைச்சர் பழனி திகாம்பரம், அந்த இடத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

அத்துடன், தமிழ் அதிபர் ஒருவர் முழந்தாழிட நிர்ப்பந்திக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் தாம் பாரிய போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது இடைநடுவில் குறுக்கிட்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபூர் ரஹுதான், இந்த சம்பவத்தை இனவாத அடிப்படையில் நோக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார்.

புத்தளத்தில் ஆசிரியர் ஒருவர் அரசியல்வாதியொருவரினால் முழந்தாழிட வைத்தமை, களனிய பகுதியில் அரச அதிகாரியொருவர் அரசியல்வாதியொருவரினால் மரத்தில் கட்டி வைக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களையும் அவர் நினைவுட்டியிருந்தார்.

இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இனத்தவர்கள் என்ற போதிலும், அந்த காலப் பகுதியில் இனவாத அடிப்படையில் அவற்றை நோக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் நேற்று கூடிய நாடாளுமன்ற கல்வி கண்காணிப்பு குழு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :