You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ரோஹிஞ்சாக்கள் விவகாரம்: பிரதமருக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்
இலங்கையில் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்ட இடத்தை முற்றுகையிட்ட பௌத்த துறவிகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்கள் சகல அகதிகளையும் கொல்லுமாறு மூத்த போலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்ததாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கூறுகின்றது.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவரான என்.எம். அமீன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஐ.நா அகதிகளுக்கான ஆணையத்தினால் பொறுப்பேற்கப்பட்டிருந்த ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அகதிகள் மீது பௌத்த கடும் போக்கு துறவிகள் மற்றும் அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலானது தற்போதைய ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் இடம் பெற்றது போன்று முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த துறவிகளின் நடவடிக்கைகள் போலிஸ் மற்றும் அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் தற்போதும் தொடர்வதாகவும் அந்தக் கடிதத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஆரம்பிக்க முற்பட்ட வன்முறைக் கும்பலின் வெறுப்புணர்வுக்கு எதிராக போலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியிலே முடிந்துள்ளன.
ஐ.நா அகதிகளுக்கான ஆணையத்தின் பராமரிப்பிலிருந்த வேளை விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக இதுவரையில் பௌத்த துறவிகளோ அல்லது வேறு நபர்களோ கைது செய்யப்படாமை கவலைக்குரியது " என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கு
சிங்கள அமைப்பு மறுப்பு
இதே வேளை இந்த சம்பவத்தின் போது ரோஹிஞ்சா அகதிகள் தாக்கப்பட்டதாக அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் டாக்டர் ராஜித சேனாரத்ன ஆகியோரால் தங்கள் மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை தாங்கள் நிராகரிப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்ன தேரோ கூறுகின்றார்.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக போலிஸாரிடம் விசாரித்த போது எதுவும் தெரியாது என்றே தங்களுக்கு பதில் தரப்பட்டதாக கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்திருக்கிறார்.
"ஐ.நா. வின் பொறுப்பில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தில் ஐ.நா கொடி பறக்கவிடப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் சொகுசு மா வீட்டில் அல்ல அகதி முகாமில் வைக்கப்பட வேண்டும்.போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அப்படி எதுவும் அங்கு காணப்படவில்லை" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த சமபவம் தொடர்பாக மூன்று போலிஸ் குழுக்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு கூறுகின்றது.
சம்பவம் தொடர்பாக கல்கிசை போலிஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட கல்கிசை நீதிமன்றம் இரு பௌத்த துறவிகள் உட்பட மூன்று பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
அக்மீமன தயாரத்ன தேரோ உட்பட மூவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆஜராக வேண்டும் என அந்த அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்