You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: 20வது திருத்தத்திற்கு கிழக்கு மாகாண சபை நிபந்தனை ஆதரவு
இலங்கையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் அரசியலமைப்பு 20வது திருத்த மசோதாவில் சட்ட மா அதிபதியினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் உள்ளடக்கப்படுமானால் அதனை ஆதரிப்பது என இன்று, திங்கட்கிழமை, கூடிய கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20வது சட்ட திருத்த மசோதாவை விவாதிப்பதற்காக கிழக்கு மாகாண சபை அவைத் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் கூடியது. நண்பகலுக்கு முன்னர் இரு தடவைகள் கூடிய போதிலும் 'கோரம்' இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டு பிற்பகல் கூடியது.
மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பு 20வது திருத்த மசோதாவை முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் சபையில் முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.
இது தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 23 பேர் உள்ளிட்ட 24 பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 3 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 9 பேரில் 8 பேர் எதிராக வாக்களித்த அதேவேளை ஒருவர் ஆதரவாக வாக்களித்தார்.
ஒருவர் தவிர மற்ற ததேகூ உறுப்பினர்கள் ஆதரவு
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11 பேரில் அமைச்சர்களான கே. துரைராஜசிங்கம், சி.தண்டாயுதபாணி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமோர் உறுப்பினரான அவையின் துணைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் அமர்வில் கலந்து கொள்ளாததால் விவாதத்திலும் வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் சபைக்கு வெளியே அவரது அலுவலகத்தில் காணப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசன்னா இந்திரகுமார் "கிழக்கு மாகாண சபையின் 5 வருட பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்தத் திருத்தம் மூலம் சபையின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடம் நீடிக்கப்படுவது மக்கள் வழங்கிய ஆணைக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது," என்றார்.
ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெறும் வகையில் மாகாண சபைகள் கலைக்கப்படும் தேதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக சட்ட மா உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
"மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு வருட காலத்திற்குள் தேர்தல்கள் நடைபெறும்." என 20வது திருத்தத்தில் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக சட்ட மா அதிபதியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
" அதாவது முதலாவதாக எந்த மாகாண சபையின் பதவிக்காலம் ஒரு வருடம் நீடிக்கப்படுகின்றதோ அந்த ஒரு வருடம் முடிவடையும் நாளில் அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டதாகிவிடும். அதன் பின்பு ஆணையத்தினால் தேர்தல்கள் நடத்தப்படும்," என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண சபை நிலையில் மாற்றம்
இதேவேளை, ஏற்கனவே திருத்தங்களை எதிர்பார்த்து தீர்மானம் நிறைவேற்றியிருந்த மேல் மாகாண சபையும் இன்று திங்கட்கிழமை அரசியல் யாப்பு 20வது திருத்தத்திற்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.45 உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாகவும் 28 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 4 பேர் சபைக்கு வரவில்லை.
இலங்கையிலுள்ள 9 மாகாண சபைகளில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகள்தான் சிறுபான்மை இனத்தவர்களினால் சபைகளாகும். இதன் காரணமாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் இது தொடர்பான சர்ச்சைகளும் வாதப் பிரதிவாதங்களையும் காண முடிகின்றது.
வட மாகாண சபை அரசியல் யாப்பு 20வது திருத்தத்தை நிராகரித்துள்ளது. திருத்தங்களுடன் முன் வைக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபை அதற்கு ஆதரவு வழங்கியுள்ளது. சட்ட மா அதிபதி நீதிமன்றத்தில் முன் வைத்துள்ள திருத்தங்களையும் கொண்டதாக 20வது அரசியல் யாப்பு திருத்தம் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
பெருன்பான்மை இன மக்களின் அதிகாரத்திலுள்ள தெற்கு மற்றும் ஊவா மாகாண சபைகள் இந்தத் திருத்தச் சட்டத்தை நிராகரித்துள்ளன. வட மத்திய மாகாண சபை மற்றும் மேல் மாகாண சபை ஆகியவை மட்டும் அதனை அங்கீகரித்துள்ளன. வட மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாண சபைகள் அதில் திருத்தங்களை எதிர்பார்க்கின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :