You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் - எச்சரிக்கை விடுப்பு
எதிர்வரும் 24 மணிநேரத்துக்குள் இலங்கையில் ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை கட்டட நிர்மாண பரிசோதனை நிலையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக காணப்படுகின்ற கடும் மழை காரணமாக இந்த அபாயம் எழுந்துள்ளதாகவும் அந்த நிலையம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரத்னபுரி, கேகாலை , நுவரெலியா, காலி, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இதுவரை சிறிய அளவிலான மண்சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
ரத்னபுரி வேவல்வத்த மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதியில் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரத்னபுரி - வேவல்வத்த பிரதான வீதியில் மண்சரிந்து விழுந்துள்ள காரணத்தினால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதேவேளையில், அதிக மழையின் காரணமாக ரத்னபுரி கேகாலை , காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 700 குடும்பங்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
இதனிடையே எதிர்வரும் மூன்று நாட்களில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கால நிலை அவதான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இர்மா சூறாவளி: ஃபுளோரிடா மாகாண மேற்கு கரையில் கடும் பாதிப்பு
- இறந்த 13 வயது சிறுமியின் உறுப்புகள் 8 பேருக்கு தானம்
- பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா'
- எகிப்து: 3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிப்பு
- "மாதவிடாயின்போது கோயிலுக்கு சென்றேன்"- பெண் எழுத்தாளர் மீது ஆன்லைன் தாக்குதல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :