You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எகிப்து: 3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள் கண்டுபிடிப்பு
எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அரச குடும்பத்தின் பொற்கொல்லர் ஒருவரின் கல்லறையை கண்டறிந்துள்ளனர். அதில் ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு மகன்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமீனெம்ஹட் எனும் அந்தப் பொற்கொல்லர் தன் மனைவியுடன் அமர்ந்திருக்கும் நிலையில் உள்ள சிற்பங்களும் அந்த மம்மிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கெய்ரோவில் இருந்து 700 கி.மி தொலைவில் உள்ள லக்ஸர் நகரத்தில் கி.மு 16-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த 'புதிய அரசவம்சம்' என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்லறையில் உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பதப்படுத்தப்பட்ட உடல்களும் அமீனெம்ஹட் உடன் தொடர்புடையதா என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.
அந்தத் தாய் ஐம்பது வயதில் இறந்திருக்கலாம் என்றும் பாக்டீரியாக்களால் எலும்புகள் பாதிக்கப்படும் நோய் அவருக்கு இருந்ததாகவும் சோதனை முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.
அவரது இரண்டு மகன்களும் முறையே இருபது மற்றும் முப்பது வயதுகளில் இருந்ததாகவும் அவர்களது உடல்கள் நல்ல நிலையில் பதப்படுத்தபட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
எகிப்தின் அந்த காலகட்டத்தின் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்பட்ட அமுனுக்கு கல்லறையை அர்ப்பணித்த பொற்கொல்லர் அமீனம்ஹெட்டின் இந்த கல்லறை, டிரா அபுல் நாகா இடுகாட்டில் பல்வேறு விஷயங்களை இனி கண்டுபிடிக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்லறைக்கு உள்ளேயும் வெளியேயும் அடக்கம் செய்ய உபயோகப்படும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,சவப்பெட்டிகள், பதப்படுத்தப்பட்ட உடல்கள், அடக்கம் செய்யும் போது பயன்படுத்தப்படும் முகமூடிகள், சில நகைகள், சிலைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இன்னும் இந்த வேலைகள் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எகிப்தின் தொல்பொருள் துறைக்கான அமைச்சர் கலீத் அல் அனானி.
மேலும் அவர் கூறுகையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நான்கு புது பெயர்களை படித்ததாகவும் அந்தப்புதுப் பெயர்கள் என்ன? அவர்களின் கல்லறை எங்கே என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாகவும், இதுவரை அவர்களின் கல்லறை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள்தான் கல்லறைகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
"நான் அல்லாவை நம்புகிறேன். நாங்கள் இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சியைத் தொடரப்போகிறோம். ஒன்றோ இரண்டோ அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் நான்கு கல்லறைகளோ கூட இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்படலாம் என நம்புகிறேன்" என்கிறார் அமைச்சர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :