You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நர மாமிசம் உண்ட பின்னர் எலும்பில் சித்திரம் வரைந்தார்களா?
பிரிட்டனில் உள்ள ஒரு குகையில் கண்டுடெக்கப்பட்டுள்ள மனித எலும்பில் வரையப்பட்டுள்ள குறுக்கும் நெடுக்குமான கோடுகள் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நர மாமிசம் உண்ணும் சடங்குகளுக்கான ஆதாரங்கள் என்று தெரியவந்துள்ளது.
சோமர்செட்டில் உள்ள கோஃப் குகையில் மனித மாமிசத்தை உண்டவர்கள் வாழ்ந்து வந்ததாக அறிவியலாளர்கள் நீண்ட காலமாக உறுதியாகக் கூறி வந்தனர். ஆனால், பிற மனிதர்களின் மாமிசத்தை உண்ணும் வழக்கம் ஏதேனும் குறியீட்டு ரீதியான முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது குறித்து தெளிவற்று இருந்தனர்.
ப்ளஸ் ஒன் என்னும் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையில், அந்த முன் கை எலும்பில் உள்ள வெட்டுக்கள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அவை மாமிசத்தை வெட்டும்போதோ, பற்களால் கடிக்கும்போதோ உண்டான வெட்டுகள் அல்ல.
கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், அந்த குறுக்கும் நெடுக்குமான வடிவங்கள், அதே காலகட்டத்தில் செதுக்கப்பட்ட மற்ற கலைப் பொருட்களிலும் காணப்பட்டுள்ளது.
கோஃப் குகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்பில் செதுக்கப்பட்டுள்ள வடிவங்கள், ஐரோப்பாவிலுள்ள பிற மக்தலீனிய வாழ்விடங்களில் (Magdalenian European sites) செதுக்கப்பட்டுள்ள வடிவங்களைப் போலவே இருப்பதாக லண்டனில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தின் சில்வியா பெல்லோ கூறுகிறார்.
பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப்பற்றிய ஆய்வு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 1903-ஆம் ஆண்டு "செட்டர் மனிதன்" (Chedder Man ) என்று அழைக்கப்பட்ட, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓர் ஆணின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
2011-ஆம் ஆண்டு பெல்லோ மற்றும் குழுவினர், நீர் அருந்தும் குவளைகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நம்பும் மண்டை ஓடுகளைக் கண்டுபிடித்தனர். அந்த மண்டை ஓடுகள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்த விதம் அவை நீர் ஊற்றி அருந்தும் நோக்கத்துடன் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கலாம், என்று அவர்களுக்குத் தோன்றியது.
அந்த எலும்பில் சிதைக்கப்பட்டு, மெல்லப்பட்டதற்கான சுவடுகள் இருந்தாலும், அதில் உள்ள கோடுகள் மேற்கண்ட செயல்களால் உண்டானவை போலில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்