You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை : யானைகளை வெளிநாடுகளுக்கு விற்கும் பரிந்துரைக்கு எதிர்ப்பு
இலங்கையில் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அண்மையில் ரத்தினபுரி, பலான்கோட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் பரணவிதான இலங்கையில் அதிகபட்சமாக 4 ஆயிரம் யானைகள் மட்டுமே இருக்கலாம் என்று கூறினார்.
ஆனால் தற்போது இலங்கையில் 6 ஆயிரம் யானைகள் காணப்படுவது மிக பெரிய அதிகரிப்பு என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளளார்.
இதனால்தான் யானைகளின் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பரணவிதான தெரிவித்திருக்கிறார்.
எனவே, யானைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை நடைமுறை படுத்தலாம் என்று தெரிவித்த அமைச்சர் பரணவிதான இவ்வாறான திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்று கூறினார்.
அமைச்சரின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இலங்கை யானை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்சிரி கருணாரத்ன இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் நடவடிக்கைக காரணமாக நாள்தோறும் பெரும் எண்ணிக்கையான யானைகள் இறந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், தற்போது பெரஹரா போன்ற பௌத்த வழிபாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தக்கூடிய 115 யானைகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.
எனவே, யானைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை தாங்கள் எதிர்ப்பதாகவும் இலங்கை யானை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அமைச்சர் பரனவிதானவின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா, நமது நாட்டின் யானைகளை விற்பனை செய்யவோ, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவோ அனுமதிக்கப்ோவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சட்ட விரோதமாக காடுகளை அழிப்பது மற்றும் மனிதர்களின் பல மோசமான நடவடிக்கைகளால், யானைகள் இறந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் ஜெயவிக்கிரம பெரேரா, இந்த நிலையில் யானைகளை விற்பனை செய்ய முடியாதென்றும் அவற்றை பாதுகாக்க தான் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்