You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை
வலதுசாரிகளை, வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) பெங்களூரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தமது தந்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கிய 'லங்கேஷ் பத்திரிகே' என்ற பத்திரிகையை நடத்திவந்த அவர், தமது வீட்டுக்கு எதிரிலேயே செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமது பத்திரிகையின் வாயிலாக, சமூக நல்லிணக்க மன்றம் (Communal Harmony Forum) என்ற அமைப்பை தீவிரமாக முன்னெடுத்துவந்தார் கௌரி.
"ஆம். கௌரி தமது வீட்டுக்குத் திரும்பியபோது செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த சூழ்நிலை, அதன் நோக்கம் ஆகியவை குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது" என்று பெங்களூரு மாநகரப் போலீஸ் ஆணையர் சுனில்குமார் பி.பி.சி. செய்தியாளர் இம்ரான் குரேஷியிடம் தெரிவித்தார்.
ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பிய கௌரி வீட்டின் கேட்டைத் திறந்துகொண்டிருந்தபோது இரண்டுமுறை நெஞ்சிலும், ஒருமுறை தலையிலும் சுடப்பட்டார் என்று பெயர் வெளியிடவிரும்பாத போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்புர்கி கொலை போலவே...
பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக சீர்திருத்தவாதி கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்ட முறையோடு கௌரியின் மரணம் ஒப்பிடப்படுகிறது.
பகுத்தறிவு குறித்தும், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான் பசவேஸ்வரா பற்றியும் கல்புர்கியும் கௌரியும் ஒரேவிதமான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
பசவரின் வசனங்களில் விவரிக்கப்படும் கொள்கைகளை மீண்டும் கடைபிடிக்கத் தொடங்குவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக விவாதிக்கப்படுவதைப் போன்ற நிலைப்பாட்டையே கல்புர்கியும் கொண்டிருந்தார். அவரும் தமது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அவர் கொல்லப்பட்டது காலை நேரத்தில்.
பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷி தொடர்புடைய அவதூறு வழக்கு ஒன்றில் அண்மையில் கௌரிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கௌரியின் தந்தை பி.லங்கேஷ், ஒரு கவிஞர், எழுத்தாளர், விருது பெற்ற திரைப்பட இயக்குநர்.
தமது தாய், தமது சகோதரியும் விருது பெற்ற திரைப்பட இயக்குநருமான கவிதா லங்கேஷ், சகோதரன் இந்திரேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார் கௌரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :