இலங்கை : ராணுவம் மீது கை வைக்க அனுமதிக்க மாட்டேன் - சிறிசேன

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி உள்ளிட்ட படையினர் மீது கை வைக்க உலகில் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 66-ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்

சர்வதேச அரசு சார்பற்ற அமைப்புகள் சில படையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க முற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய மீது பிரேசில் மற்றும் கொலாம்பியா ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக பதிலளிக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.

"சில தினங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய மீது குற்றம்சாட்டபட்டுள்ளது. இது கடல் எல்லைக்கு அப்பால் உள்ள பிரச்சனை ஆகும். இந்நாட்டு பிரச்சினை அல்ல. ஜகத் ஜெயசூரிய உள்ளிட்ட எந்தவொரு ராணுவ அதிகாரி மீதும் கை வைக்க உலகில் எவருக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை" என்று அந்த வழக்குகள் தொடர்பாக கூறினார்.

"விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய அவர்களின் பணத்திற்காக வேலை செய்கின்ற அரச சார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய தேவை இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :