You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓய்வு பெற்ற அதிகாரிகளை மோதி அமைச்சர்களாக்குவது ஏன்? பா.ஜ.கவில் திறமையானவர்கள் இல்லையா?
பிரதமர் நரேந்திர மோதி புதிதாக 9 அமைச்சர்களைத் தனது அமைச்சரவையில் சேர்த்துள்ளார். இந்த ஒன்பது புதிய அமைச்சர்களில் நான்கு பேர் ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள்.
முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே சிங், முன்னாள் மும்பை போலீஸ் ஆணையர் சத்யபால் சிங், ஓய்வு பெற்ற வெளியுறவுத்துறை தூதர் ஹர்தீப் சிங் பூரி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ஜெ. அல்ஃபோன்ஸ் ஆகியோர் மோடி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
இவர்களில் கே.ஜெ. அல்ஃபோன்ஸும், ஹர்தீப் சிங் பூரியும் எம்.பியாகக் கூட இல்லாதவர்கள்.
மோதி அரசு அமைந்ததில் இருந்து, அமைச்சரவையில் தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் போதிய அளவில் இல்லை என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தனது அமைச்சரவையை மோதி விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் இதே கேள்விகள் எழுகின்றன.
பா.ஜ.கவில் திறமையான நபர்கள் இல்லாததால், அக்கட்சி ஓய்வு பெற்ற அதிகாரிகளை நம்பியிருக்க வேண்டியிருப்பதாகப் பேச்சுகள் எழுகின்றன.
"அமைச்சர் பதவிக்கு இன்னும் முன்னாள் அதிகாரிகளைப் பா.ஜ.க எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அக்கட்சியில் திறமையானவர்கள் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது"என மூத்த செய்தியாளர் வீர் சங்வி ட்விட் செய்துள்ளார்.
2015-ம் ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பா.ஜ.க துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே,"காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பிடும் போது எங்கள் கட்சியில் திறமையான மற்றும் தகுதியான நபர்கள் குறைவாக உள்ளனர்" என கூறியிருந்தார்.
பா.ஜ.கவில் திறமையானவர்களுக்கு பஞ்சம் இல்லை என்றும் ஆனால், அவர்களுக்கான இடம் தரப்படுவதில்லை என்றும் பலர் நம்புகின்றனர்.
"மோதி அரசு சராசரியாக செயல்படுபவர்களையே எதிர்பார்க்கிறது. திறமையானவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் இதற்கான உதாரணங்களாக இருக்கின்றனர்" என பொருளியல் பேராசிரியர் டிஎம் திவாகர் கூறுகிறார்.
இவர்கள் மூவரும் அவர்களது துறைகளில் நன்கு அறியப்பட்ட நபர்கள். அனால், மோதி அரசில் அவர்களுக்கு போதிய இடம் தரப்படவில்லை எனவும் கூறுகிறார் திவாகர்.
'ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம்' காரணம்?
டி.வி நடிகை ஸ்மிருதி இரானிக்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது, முக்கியமான அமைச்சர் பதவி சரியான நபருக்குத் தரப்படவில்லை என விமர்சிக்கப்பட்டது. ஸ்மிருதி இரானி எடுத்த முடிவுகள் சர்ச்சைக்கு வழிவகுத்தால், பிறகு அவர் வேறு அமைச்சரவைக்கு மாற்றப்பட்டார்.
இதேபோல் கோவா முதல்வராக இருந்த மனோகர் பரிக்கர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். சிறிது காலத்தில் மீண்டும் கோவா முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
"மோதி அரசின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், திறமையானவர்கள் நபர்கள் ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தின் கீழ் பணியாற்ற வேண்டியுள்ளது. எனவே திறமையானவர்கள் ஆதிக்கத்தின் கீழ் பணியாற்ற விரும்புவதில்லை "என மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறுகிறார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவம் வாய்ந்த நபர்களில் வயதைக் காரணம் காட்டி, அவர்களுக்கு மோதி அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை.
75 வயதை கடந்த பா.ஜ.க தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படாதது குறித்து கருத்து தெரிவித்திருந்த வாஜ்பாய் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா,"75 வயதைக் கடந்த பா.ஜ.கவினருக்கு `மூளை செத்துவிட்டது` என பிரதமர் அறிவித்துள்ளார்"என கூறியிருந்தார்.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்றவர்கள் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தபோதிலும், திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் தருவதில் தனி கவனம் செலுத்தினர்.
வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங்கும் திறமைக்கு முக்கியத்துவம் தந்ததாக பாராட்டப்பட்ட நிலையில், மோதி அமைச்சரவையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :