கொழும்பில் இருந்து குப்பைகளை புத்தளம் கொண்டு செல்ல திட்டம்

கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை புத்தளம் பகுதிக்கு கொன்று சென்று கொட்டும் திட்டமொன்றை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரணவக்க இந்த திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் அருக்காவிழு எனும் பகுதியில் சிமெண்ட் உற்பத்திக்காக பயன்படுத்தும் மூலப் பொருட்களை தோண்டியெடுப்பதன் காரணமாக அப்பகுதியில் பாரிய குழிகள் உருவாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கொழும்பில் அகற்றப்படும் குப்பைகளை அந்த குழிகளுக்குள் கொட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து குப்பைகளை ரயில் மூலம் புத்தளம் பகுதிக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர் நாளொன்றுக்கு ரயில் முலம் 1200 டன் குப்பை அங்கு கொண்டுசெல்ல முடியுமென்று கூறினார்.

சிமெண்ட் உற்பத்திக்காக அப் பகுதியில் இருந்து வருடாந்தம் 14 இலட்சம் டன் மூலப்பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படுவதன் காரணமாக அங்கு வருடம் தோறும் பாரிய குழிகள் ஏற்படுவதாக தெரிவித்த அமைச்சர் கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை அதற்குள் கொட்டுவதன் மூலம் அந்த கிடங்குகளை மூடிவிட முடியுமென்றும் தெரிவித்தார்.

இதன்படி கொழும்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வருடாந்தம் அகற்றப்படும் 10 இலட்சம் டன் எடையுள்ள குப்பைகளை அங்கு இலகுவாக கொட்ட முடியுமென்று கூறிய அவர், சுழல் மற்றும் சுகாதார ரீதியாக பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் இந்த திட்டம் நடைமுறைபடுத்த தீர்மானித்துள்ள காரணத்தினால் அதனை எதிர்த்து போராட்டங்களை மேற்கொள்ள மக்கள் முன்வர கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 2019 ம் ஆண்டு அளவில் கொழும்பு நகரில் குப்பை பிரச்சினையை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரலாம் என அமைச்சர் ரணவக்க தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்